கொத்மலை கல்வி வலயத்தில் உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய அப்துல்காதர் கமால்டீன் தனது 38 வருட கல்வி சேவையிலிருந்து கடந்த புதன்கிழமை ஓய்வு பெற்றார். தலவாக்கலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தலவாக்கலை சுமன மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார். 1983 ம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இணைந்துக் கொண்ட இவர் அக்கரப்பத்தனை ஆட்லோ தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். பின்னர் 1989 ம் ஆண்டு கொட்டக்கலை எதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாச்சாலையில் ஆசிரியர் பயிற்சியினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் கிளனமோரா தமிழ் வித்தியாலயம், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். பின்னர் திம்புள்ள தமிழ் வித்தியாலயம் மற்றும் சென் கூம்ஸ் தமிழ் வித்தியாலம் போன்ற பாடசாலைகளில் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். பின்னர் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் 8 வருடங்கள் அதிபராக கடமையாற்றிய நிலையில் 2017 ம் ஆண்டு முதல் கொத்மலை கல்வி வலயத்தில் உதவி கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று ஓய்வுபெறும் வரை அங்கு கடமையாற்றினார்.
பல்வேறு நிறுவனங்களினூடாக பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு மலையக சமூகத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். இவர் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியிலேயே கிறேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயம் பாரிய வளர்ச்சி கண்டது. கரப்பந்தாட்ட போட்டிகளில் கிறேட்வெஸ்டன் பாடசாலை மாணவர் அணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது. தொடர்ச்சியாக தமிழ் தின போட்டிகளில் முதலாம் இடம்,அதிகளவிலான மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதி பெற்றனர். அன்றைய காலகட்டத்தில் மிக நீண்ட காலமாக கிறேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயம் மற்றும் கல்கந்தவத்தை தமிழ் வித்தியாலய மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் இறுதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக தலவாக்கலை நகர பாடசாலைகளுக்கே சென்றனர். இதனால் இம்மாணவர்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகினர் காரணம் இப்பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நகருக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல போக்குவரத்து இல்லாமையும் அதிக தூரம் காரணமாகவும் மாணவர்கள் பல்லேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அப்போது கல்கந்தவத்தையில் ஆசிரியராக கடமையாற்றிய பி.கேதீஸ்வரன் மற்றும் அதிபர் கமால்டீன் ஆகியோரின் விடா முயற்சியால் 2015 ம் ஆண்டு முதல் கிறேட்வெஸ்டன் பாடசாலை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நிலையமாக்கப்பட்டது. இதனால் இப்பிரதேச மாணவர்கள் நன்மையடைந்தனர். இது மட்டுமல்லாமல் இவரின் காலப்பகுதியிலேயே அதிகளவான பௌதீக வளங்கள் இப்பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment