தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த இருநாள் செயலமர்வு!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீட மாணவர் செயற்பாட்டு நிலையத்தில், 2025 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில், “பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (Sexual and Reproductive Health Rights – SRHR)” குறித்த இரண்டாவது இருநாள் பயிற்சி செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவ மற்றும் ஒப்புரவு நிலையம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றத்துடன் (MWRAF) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் சுமார் 50 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முதல் நாள் நிகழ்வுகள் (24.09.2025)

பல்கலைக்கழக பால்நிலை சமத்துவ மற்றும் ஒப்புரவு நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.டபிள்யூ.என். நளீபா தலைமையில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், ஆங்கில மொழி கற்கைகள் திணைக்கள தலைவர் கலாநிதி எம்.ஐ. பாத்திமா கரீமா, புவியியல் துறைத் தலைவர் கலாநிதி ஐ.எல் முகம்மட் ஸாஹிர், கலைக் கலாசார பீட சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர், MWRAF இன் மருதமுனை கிளை உத்தியோகத்தர்கள் திருமதி ஹபீஸ் மற்றும் திருமதி அனுஷ்கா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் துறைத் தலைவர்கள் மிகவும் பெறுமதியான கருத்துக்களை மாணவர்களுடன் பரிமாறிக் கொண்டனர்.

செயலமர்வின் முதலில் கலாநிதி நளீபா “பால் மற்றும் பால்நிலை வேறுபாட்டிகு இடையேயான வித்தியாசம்” என்ற தலைப்பில் விரிவான உரையாற்றினார். பாலினக் கருத்துக்களில் நிலவும் தவறான புரிதல்கள், பாலினக் கட்டமைப்புகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பாலினக் கடமைகள் குறித்த விளக்கங்களும் இங்கு வழங்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க ஆண்களின் பங்கு, வன்முறையின் வகைகள் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மௌலவி ஹாசிர் நஜீப் “இஸ்லாத்தில் ஆண்-பெண் உறவின் தன்மைகள்” குறித்தும், குடும்ப வன்முறையுடன் தொடர்பான தவறான கருத்துக்களைச் சீர்செய்தும் உரையாற்றினார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர்

வைத்தியர் பாரூக் இனப்பெருக்க சுகாதாரத்தை மையப்படுத்தி, பாதுகாப்பான தாய்மை, குழந்தை உயிர்காக்கும் முறைகள், கருக்கலைப்பின் பாதிப்புகள் மற்றும் குழந்தைப்பிறப்புக்கான சரியான இடைவெளியின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

“இஸ்லாம் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம்” என்ற தலைப்பில் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குழந்தைப் பிறப்பிற்கான இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்த உரையும் இடம்பெற்றது.

நாளின் இறுதியில் குழுப்பணிகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் (25.09.2025)

இரண்டாம் நாள் முதல் நாளின் சுருக்கத்துடன் துவங்கியது.

வைத்தியர் பாரூக் “பாதுகாப்பான தாய்மை – சுகாதார சவால்கள்” என்ற தலைப்பில் கர்ப்ப கால சிக்கல்கள், இளமைக் கர்ப்பத்தின் அபாயங்கள் மற்றும் பாதுகாப்பான பிரசவத்திற்கான நடைமுறைகள் குறித்து உரையாற்றினார்.

பின்னர், கலாநிதி நளீபா மற்றும் மௌலவி ஹாசிர் நஜீப் இணைந்து சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்களின் பாதகமான விளைவுகளை (பெண் உறுப்பு சிதைப்பு, சிறுவயது/கன்னித்தன்மை பரிசோதனை, போன்ற பாரம்பரிய வன்முறைகள்) எடுத்துரைத்தனர். மேலும், பெண்களின் சுகாதாரத்தை முன்னேற்றுவதில் ஆண்களின் நேர்மறையான பங்கு குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

இஸ்லாமிய போதனைகள் இத்தகைய தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை மறுக்கும் வகையில் இருப்பதை மௌலவி ஹாசிர் நஜீப் தெளிவுபடுத்தினார்.

அதன் பின் பாலியல் சுகாதாரம் குறித்த அமர்வு நடைபெற்றது. இதில் அபாயகரமான பழக்கவழக்கங்கள், பாலியல் தொடர்பான நோய்கள் (HIV உட்பட), பாதுகாப்பான உறவுகளின் அவசியம், மற்றும் பாலியல் சுகாதாரத்தைச் சார்ந்த தவறான நம்பிக்கைகளை முறியடித்தல் ஆகியவை விளக்கப்பட்டன.

இறுதியாக, இருநாள் நிகழ்வின் கற்றல்களைப் பங்கேற்பாளர்கள் குழுவாரியாக சுருக்கி வழங்கினர்.

மதிப்பீடு மற்றும் நிறைவு உரையுடன் செயலமர்வு நிறைவுற்றது.

இந்நிகழ்வின் மூலம், பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான தாய்மை, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு, ஆண்கள் மற்றும் பெண்களின் பொறுப்புணர்வு, தீங்கு விளைவிக்கும் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் பாதிப்பு, மற்றும் இஸ்லாமிய பார்வையின் தெளிவு ஆகியவற்றில் விரிவான அறிவைப் பெற்றனர்.

இவ்வகை செயலமர்வுகள், எதிர்கால சமூக முன்னேற்றத்திற்கும், இளைஞர் தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் பங்களிக்கும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.












 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :