உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் நூலகத்தின் முற்றலில், சமாதானம் குறித்த சிறப்பு புத்தகக் கண்காட்சியாகத்தைத் திறந்து வைத்ததுடன் நூலகர் எம்.எம். றிபாஉத்தீன் வழிகாட்டலிலும் உபவேந்தரின் பங்களிப்புடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீட அரசியல் அறிவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதம்பாவா சர்ஜூன், “ஓரத்திலா அல்லது ஓரங்கட்டப்பட்டனரா? இலங்கையில் இன மோதல் மற்றும் சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களை நிலைநிறுத்துதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இலங்கை அரசியல், இன உறவுகள் மற்றும் சமாதான கட்டமைப்புகள் குறித்த தனது ஆழமான ஆய்வுகளால் கல்வியுலகில் பெயர் பெற்ற பேராசிரியர் சர்ஜூன், உரையின் போது சமாதானம் மற்றும் இன ஒற்றுமை நோக்கில் முஸ்லிம்களின் பங்கு, சவால்கள், மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பில் விரிவாக விளக்கினார்.
பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாஉத்தீனின் முன்னிலையில் சிரேஷ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம்.அஸ்வர், ஏ.எம். நஹ்பீஸ், எஸ்.எல்.எம். ஸஜீர் மற்றும் நூலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. நிகழ்வை நூலக சிரேஷ்ட உத்தியோகத்தர் சி.எம்.ஏ. முனாஸ் நெறிப்படுத்தினார்.
சிரேஷ்ட பேராசிரியர் அதம்பாவா சர்ஜூன் தொடர்பான விளக்கவுரையை உதவி நூலகர்களான எம்.சி.எம்.அஸ்வர் நிகழ்த்தினார்.
நிகழ்வோடு இணைந்து “Words Uniting Worlds” எனும் தலைப்பில் சமாதானம் குறித்த சிறப்பு புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக சமாதானம், மனித உரிமைகள், மத நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமை தொடர்பான பல்வேறு நூல்கள் வாசகர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன அத்துடன் இங்கு மாணவர்களுக்கு நூலக வளங்களை அறிமுகப்படுத்தும் அறிவியல் விளக்கக் காட்சி நடைபெற்றது. இதில் அச்சு நூல்கள், மின்னூல்கள் (eBooks), மற்றும் ஒன்லைன் கல்வித் தரவுத்தளங்கள் காண்பிக்கப்பட்டன.
“ஓரத்திலா அல்லது ஓரங்கட்டப்பட்டனரா? இலங்கையில் இன மோதல் மற்றும் சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களை நிலைநிறுத்துதல்” என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீட அரசியல் அறிவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதம்பாவா சர்ஜூன் உரையாற்றும் போது; சர்வதேச சமாதான தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1981ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய சமாதான பணிகளுக்காக உயிர்தியாகம் செய்தவர்களை நினைவுகூரவும், சமாதான பண்பாட்டை வளர்ப்பதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார்.
சமாதானம் என்பது வெறும் போர் இல்லாத நிலை மட்டுமல்ல என்றும் அது மனிதர்களிடையே பரஸ்பர மதிப்பும் புரிதலும் நிலைபெறுவதைக் குறிக்கிறது என்றும் இயற்கையையும்—காடுகள், நதிகள், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்காக சிறந்த உலகை உருவாக்கும் முயற்சிகளும் சமாதானத்தின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்தார்.
பல்துறை, பல்பண்பாட்டு அமைதி மிகவும் அவசியமானது என்றும் பல்வேறு இன, மத, சமூகக் குழுக்கள் சம உரிமைகளுடனும் சம வாய்ப்புகளுடனும் வாழும் சூழலை உருவாக்கினால்தான் நிலையான அமைதி உருவாகும் என்றும் தெரிவித்தார். உதாரணமாக, கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் “பன்மைத்துவத்தை” தேசிய செல்வமாகக் கருதி வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் எடுத்துரைத்தார்.
அமைதிக்கான கல்வி மிக முக்கியம். சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு சகிப்புத் தன்மை, மனித மதிப்பு, அன்பு போன்றவற்றை கற்றுக் கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நிலையான அமைதி நிலைபெறும் என்றும் பல நாடுகளில் பாடசாலைக் கல்வியில் “சமாதான கல்வி” ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைச் சூழலில், நீண்டகால உள்நாட்டுப் போரின் பின்னர் பல இன, மத சமூகங்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். அரசியல் துறையிலும், சமூகத் துறையிலும் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் எப்போதும் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்களித்திருக்கின்றனர் என்பதும் வரலாற்று உண்மை என்றும் தெரிவித்தார்.
இன்றைய நிலையில், எங்கள் சமூகத்தின் உரிமைகளும் தேவைகளும் மதிக்கப்பட வேண்டும். சமநீதியும் சம வாய்ப்பும் நிலைபெற வேண்டும். இன, மத வேறுபாடுகளைக் கடந்து, ஒற்றுமையுடன் வாழும் “உண்மையான பல்வகை சமூகத்தை” நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
நிலையான அமைதி உருவாக, ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும். அரசியல் தீர்மானங்களில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் உரிமைகள், பெண்களின் உரிமைகள், பழங்குடியின மக்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றுக்கும் அடிப்படை கல்விதான். கல்வியின் மூலம் மட்டுமே புரிதலும் பொறுமையும் சமாதானமும் உருவாக முடியும். நமது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் “சமாதானக் கல்வி” சிறப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய உலகில் முஸ்லிம் சமூகமும், தமிழ் சமூகமும், சிங்கள சமூகமும், அனைத்து சமூகங்களும் இணைந்து நமது நாட்டின் எதிர்காலத்தை அமைக்க வேண்டும். கடந்த காலத்தின் கசப்புகளை மறந்து, புதிய சமாதானத்திற்கும் வளர்ச்சிக்கும் நாமும் பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..
நிலையான அமைதி என்பது ஒரு கனவு அல்ல—அதை எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளால் நிஜமாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் சபையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான் மற்றும் விரிவுரையாளர்கள், நூலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
.jpg)
0 comments :
Post a Comment