“சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது நம் சமூகத்தின் கடமை” – வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி பாத்திமா. றிகாஸா ஷர்பீன்



சாய்ந்தமருதில் சிறுவர் தினக் கொண்டாட்டம் – “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்”
ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை மகளிர் படையணி (Women’s Corps – Sri Lanka) ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் அக்டோபர் 01, 2025 அன்று சாய்ந்தமருது பொலிவேரியன் கலாச்சார நிலைய கேட்போர் கூடத்தில் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி ஏ.பாத்திமா றிகாஸா ஷர்பீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள் (Nurture with Love – To Lead the World)” என்ற இந்தாண்டு உலகளாவிய சிறுவர் தினத் தொனிப்பொருளோடு இணைந்து இடம்பெற்றது.

நிகழ்வில் சிறுவர்களின் விளையாட்டுகள், நடனங்கள், வினோத உடைப்போட்டிகள், கதைக்கூறல், பாடல்கள் எனக் குழந்தைகளின் சிரிப்பும், படைப்பாற்றலும், மகிழ்ச்சியும் மையப்படுத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சாய்ந்தமருது மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து பல சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முகம்மது ஆஷிக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மாலிக், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனுஸ் காரியப்பர், கிழக்குமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பதில் பிரதி மாகாண பணிப்பாளர் பொறியாளர் எம்.எம்.எம். முனஸ், காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல். பாத்திமா றிம்ஸியா, தொழிலதிபரும் கலைஞருமான ஏ.எல். ஆப்தீன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர். ரோஸ்மி, சமுர்த்தி வங்கி மாவட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் அக்கரைப்பற்று நிலாமியா ஜூனியர் பாடசாலையின் ஆசிரியை ஏ.எல். பாத்திமா நுஸ்ஹா, , ஓய்வுபெற்ற ஆசிரியை மௌலவியா எம்.எஸ்.எஸ். நிஸ்ரினா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறுவர் தினத்தை சிறப்பித்தனர்.

உரையாற்றிய ஏ.எப். றிகாஸா ஷர்பீன் கூறியதாவது:


இன்று உலகளாவிய ரீதியில் சிறுவர் தினம் “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” (Nurture with Love – To Lead the World) என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகின்றது. இது மிக முக்கியமான ஒரு நாள். ஏனெனில், சிறார்கள் தான் நாளைய சமூகத்தின் தலைவர்கள், நாட்டின் எதிர்காலம், உலகின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருப்பவர்கள்.

சிறுவர்களின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சமமான உரிமைகள் குறித்து உலக நாடுகள் சிந்தித்து, குழந்தைகள் எவ்வித பாகுபாடுகளும் இன்றி மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையில் சிறுவர் தினம் அறிவிக்கப்பட்டு, உலகளவில் பல்வேறு நாடுகளில் இத்தினம் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், இன்று நாம் இதனை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

எங்கள் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு இவ்வாண்டு சிறுவர் தினத்தை மிக வித்தியாசமாக கொண்டாடும் நோக்கில், சாய்ந்தமருதின் பத்து பாலர் பாடசாலைகளில் உள்ள சிறார்களை ஒன்றிணைத்து, அவர்களது கலை, கலாச்சாரம், விளையாட்டு, வினோத நிகழ்வுகளை ஒரே அரங்கில் நிகழ்த்துவதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இது, சிறுவர்களின் மகிழ்ச்சியையும், அவர்களுக்கான எங்களது அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நாளாக அமையும் என்று நம்புகிறேன்.

அன்பு சிறார்களே, உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வியிலும், ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்குங்கள். எங்கள் சமுதாயமும், நாடும், உலகமும் உங்களை நம்பி நிற்கின்றன. உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்தெடுத்து நாளைய நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்பது எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.

முடிவாக, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, உலகின் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான துஷ்பிரயோகம் விளங்குகிறது. சிறுவர்கள் நம் சமூகத்தின் மிக முக்கிய அங்கமாக இருந்தாலும், பலவீனமானவர்கள் என்பதனால் உரிமை மீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அதிகம் ஆளாகின்றனர்.

1989 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட சிறுவர் உரிமைப் பிரகடனம் சிறுவர்களைக் காக்கும் முக்கியமான அடித்தளம். இதில் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்பட்டு, அவர்களின் உரிமைகள் சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆனால் உடல், உளவியல், உணர்ச்சி, பாலியல், புறக்கணிப்பு ஆகிய பல்வேறு வடிவங்களில் உலகளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்கிறது. இதை முற்றிலும் தடுக்க, குடும்பம், பாடசாலை, சமூக நிறுவனங்கள், அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

சிறுவர் தினத்தை ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், வருடம் முழுவதும் அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டியது அவசியம். எதிர்கால தலைமுறையை ஆரோக்கியமான, அறிவார்ந்த, பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க விரும்பினால் இன்று குழந்தைகளை அன்புடன் போஷித்து, பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். இதுவே இவ்வாண்டின் உலக சிறுவர் தினத் தொனிப்பொருளின் உண்மையான செய்தியாகும்.” என அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆஷிக் உரையாற்றும்போது;


இன்று நாங்கள் ஒன்றுகூடியிருப்பதற்குக் காரணம் மிகவும் விசேஷமானது—சர்வதேச சிறுவர் தினம். உலகின் பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் திகதி குழந்தைகளுக்காகவே ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடுகின்றனர். இவ்வாண்டு இந்த தினம் “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள் (Nurture with Love – To Lead the World)” எனும் தொனிப்பொருளின் கீழ் உலகளாவியமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறுவர்கள் இந்த நாட்டின் எதிர்காலமும், சமூகத்தின் உயிரும், நம் குடும்பங்களின் சந்தோஷமும் ஆவர். அவர்கள் சிரிக்கும் போது நாம் சிரிக்கிறோம்; அவர்கள் கற்றுக் கொள்கிறபோது நம்முடைய எதிர்காலம் பாதுகாப்பாகிறது. அவர்களின் சுத்தமான உள்ளமும், அப்பாவித்தனமும் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வல்லது.

சிறுவர்களை மகிழ்விப்பது மட்டுமல்ல, அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது, கல்வி வழங்குவது, நற்பண்புள்ள குடிமக்களாக உருவாக்குவது என்ற கடமையும் நமக்கே உண்டு. இதனை நாம் மறந்து விடக் கூடாது.

இன்று பொலிவேரியன் கிராம கலாச்சார மண்டபத்தில் பல பாடசாலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த வாய்ப்பை அவர்களுக்கு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை நாம் மறக்க முடியாது. கல்வியில் சம வாய்ப்பு இல்லாமை, வறுமை, தொழிலாளர் சுரண்டல், வன்முறை, போர் மற்றும் இடம்பெயர்வுகள் போன்ற சிக்கல்கள் இன்னமும் கோடிக்கணக்கான சிறுவர்களை பாதித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இத்தகைய தினங்கள் நம்மை விழிப்புணர்வுடன் செயல்படச் செய்கின்றன.

இலங்கையிலும் சிறுவர்களுக்காக அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இலவசக் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள், சட்ட ரீதியான பாதுகாப்புகள் ஆகியவை வழங்கப்பட்டாலும், சமூகத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் நாம் சிறுவர்களின் நலனுக்காக பங்களிக்க வேண்டியது மிக முக்கியம்.

எல்லா பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக தலைவர்களும் ஒன்றிணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் வெற்றியடையும் போது அவர்களை பாராட்டவும், அவர்கள் தோல்வியடையும் போது அவர்களை ஊக்குவிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு, நம் குழந்தைகளின் மகிழ்ச்சியையும் உரிமைகளையும் பாதுகாப்போம் என்று நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் “அன்பால் போஷித்து – உலகை வழிநடத்தும்” தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட டாக்டர் சனூஸ் காரியப்பர் தனது உரையின்போது;


இன்றைய சர்வதேச சிறுவர் தினம் உலகம் முழுவதும் சிறார்களின் உரிமைகள், அவர்களின் வளர்ச்சி மற்றும் நலனை நினைவூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சிறுவர் பருவம் என்பது வாழ்க்கையின் அடித்தளத்தை அமைக்கும் மிக முக்கியமான காலம். இந்த பிரீஸ்கூல் (preschool) காலம் அவர்களின் புலன்கள் மூலம் கற்றறியும், நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்திக் கொள்வதற்கான ஆரம்பப் பருவம்.

இந்த காலத்தில் கற்ற நல்ல விஷயங்கள் வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். அதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து குழந்தைகளுக்கு நல்ல மதிப்பீடுகள், நல்ல பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்பிக்க வேண்டும்.

இன்றைய குழந்தைகள் கல்வியிலும் குணாதிசயத்திலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதில் நம்மிடம் பெரும் ஆர்வம் உள்ளது. ஆனால் உடல்நலம் பாதிக்கப்படும்போது கல்வியும், ஆளுமையும் பாதிக்கப்படும்.

இன்றைய மூன்று பெரிய சவால்கள்:

1. உணவு பழக்கம் (Diet):

– வெளி உணவுகள், செயற்கை உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் குழந்தைகளின் உடல் பருமன் (obesity) மற்றும் வயிற்றுப்பகுதி கொழுப்பு (abdominal obesity) போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கின்றன.

– பெற்றோர்கள் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது அவசியம்.

– ஆரோக்கியமான உணவு தயாரிக்க நேரம் செலவிடுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான முதலீடு.

2. உடற்பயிற்சி (Physical activity):

– தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடைப்பயிற்சி, ஓட்டம், விளையாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட வேண்டும்.

– இது அவர்களை உடல், மன ரீதியாக ஆரோக்கியமாகவும் உழைப்புத் தன்மை கொண்டவர்களாகவும் உருவாக்கும்.

3. மின்னணு சாதனங்கள் (Smartphone/Screen time):

– சிறிய வயதிலேயே ஸ்மார்ட்போன், டேப்லெட், டிவி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், சமூக பழகும் திறனுக்கும் தீங்கு விளைவிக்கிறது.

– சில ஆய்வுகள் அதிக ஸ்கிரீன் நேரம் குழந்தைகளில் Autism spectrum போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கும் அபாயத்தைச் சொல்கின்றன.

– பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிட வேண்டும். பழைய காலத்தில் பாட்டி, அம்மா பிள்ளைகளோடு கதைகள் பேசுவது போல இன்றும் பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.

இது வெறும் ஆரோக்கியம் பற்றிய பேச்சல்ல. இன்று நாம் உருவாக்கும் குழந்தைகளே நாளைய சமூகத்தை உருவாக்குவார்கள்.

அவர்கள் மனிதத்தன்மையுடனும் கருணையுடனும் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். இல்லையெனில் அவர்கள் "ரோபோ" போல, உணர்வு அற்றவர்களாக ஆகிவிடுவார்கள்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக தலைவர்கள் – அனைவரும் இணைந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், கல்வியையும், மதிப்பையும் காப்பாற்றினால் மட்டுமே ஆரோக்கியமான, நாகரிகமான, மனிதநேயமான எதிர்கால தலைமுறை உருவாகும்.

ஆரோக்கியமான உணவுகளை வழங்குங்கள்.
உடற்பயிற்சியை ஊக்குவியுங்கள்.
மின்னணு சாதனங்களை குறையுங்கள்.
குழந்தைகளுடன் தரமான நேரம் செலவிடுங்கள்.
இதுவே உண்மையான சிறுவர் தின கொண்டாட்டம்.


எல்லா பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகத்தினரும் இதில் பங்கேற்க வேண்டும்.

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக் உரையாற்றும் போது;


இன்று நாம் கொண்டாடும் இந்த சிறுவர் தினம், ஒரு கொண்டாட்ட நாளாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் நாளாகவும் திகழ்கிறது. குழந்தைகள் இன்று சந்தோஷமாக விளையாடி, கலை நிகழ்ச்சிகள் செய்து மகிழ்வதற்காக மட்டும் அல்லாமல், அவர்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாகவும் ஒழுக்கத்துடனும் அமைந்து செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.

சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதற்கு அவர்கள் உரிய உரிமைகளை பெற்றிருக்க வேண்டும். கல்வியிலும், வாய்ப்புகளிலும், பாதுகாப்பிலும் சம பங்கு வழங்கப்பட வேண்டும். “இன்று மட்டுமே சிறுவர் தினம்” என்று நினைக்காமல், ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, உரிமைகள், கல்வி, அன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நாளாகவே இருக்க வேண்டும்.

அன்பான மாணவர்களே, உங்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் மிக முக்கியமான கருவி கல்வி. கல்வி இல்லாமல் அறிவு இல்லை, அறிவு இல்லாமல் வளர்ச்சி இல்லை. கல்வி உங்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் நிறுத்துவதோடு மட்டும் அல்லாமல், உங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றும் சக்தியாகிறது.

ஆனால், கல்வி என்பது புத்தக அறிவில் மட்டும் சுருங்கக் கூடாது. நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு, நல்ல நடத்தை ஆகியவற்றுடன் சேர்ந்தால்தான் கல்வி முழுமை பெறும். “ஒழுக்கமில்லா கல்வி, திசை தெரியாத கப்பல் போன்றது” என்பதுபோல, கல்வி மற்றும் ஒழுக்கம் இணைந்தால்தான் மாணவர்கள் நல்ல மனிதர்களாகவும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாகிறார்கள்.

இன்றைய சமூகத்தில் நாம் காணும் பல சிக்கல்களும் பிரச்சினைகளும், உண்மையில் ஒழுக்கக் குறைவால் தான் ஏற்பட்டுள்ளன. மாணவர்கள் சிறுவயதிலிருந்தே முறையான ஒழுக்கம், மரியாதை, நேர்மை, பொறுப்பு ஆகியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான அடித்தளம் குடும்பத்தில் பெற்றோராலும், பள்ளியில் ஆசிரியர்களாலும் அமைக்கப்படுகிறது.

நீங்கள் நாளைய சமூக தலைவர்களாக உருவாகப்போகிறீர்கள். ஆகையால், கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். கல்வியால் அறிவாளியாகவும், ஒழுக்கத்தால் சிறந்த மனிதர்களாகவும் இருக்க வேண்டும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பை சுமக்கிறார்கள். மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து வளர்த்துக் கொடுப்பதும், அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமை. அதே சமயம், பெற்றோர்களும் வீட்டில் நல்ல ஒழுக்கம், அன்பு, புரிதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

அன்பான சிறுவர்களே, இன்று உங்களுக்காகவே இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் கற்றுக் கொள்ளவும், மகிழவும், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும், எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாகவும்.

அக்கரைப்பற்று நிலாமியா ஜூனியர் பாடசாலையின் ஆசிரியை ஏ.எல். பாத்திமா நுஸ்ஹா தனது உரையில்;


இன்றைய சிறுவர் தினம் மிக அர்த்தமுள்ளதாகும். "உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்" என்பது இவ்வாண்டு சர்வதேச சிறுவர் தினத்தின் தொணிப்பொருளாகும். இது மிகச் சிறந்த செய்தியை நமக்கு அளிக்கிறது – இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அடித்தளம் குடும்பத்தில் தொடங்குகிறது. ஒரு நல்ல குடும்ப சூழல், அன்பு, ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அளித்தால் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் நல்ல குடிமகனாக வளர்வான்.

அடுத்து குழந்தை காலடி வைக்கும் இடம் பாடசாலை. குறிப்பாக முன்பள்ளி கல்வி குழந்தையின் மனமும் இதயமும் மலரச் செய்கிறது.

இங்கே ஆசிரியர் என்பது ஒரு சிறந்த சிற்பியோடு ஒப்பிடப்படுகிறார்.

சிற்பி ஒரு கல்லை செதுக்கி அழகான சிலையை உருவாக்குவது போல, ஆசிரியர் ஒரு குழந்தையை செம்மையான மனிதனாக மாற்றுகின்றார்.

இங்கே நான் ஒரு சிறிய கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முறை பாடசாலையில் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஒரு மாணவன் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் இரண்டு வயதான நண்பர்கள் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தனர். அவன் தனியாக முன்னேறி ஜெயிக்கக்கூடியவன். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை.

அவர்களை கைவிடாமல், பொறுமையாக, அன்போடு கைகோர்த்து சேர்ந்து ஓடினான்.

அவர்கள் இலக்கை அடைந்ததும், ஆசிரியர் அவனைப் பார்த்து சொன்னார்:

“உண்மையான வெற்றி தனியாக ஓடி இலக்கை அடைவதில் இல்லை.

மற்றவர்களை அன்போடு கைகோர்த்து, சேர்ந்து இலக்கை அடைவதே வாழ்க்கையின் உண்மையான வெற்றி.”

இந்தக் கதையின் போதனை என்னவெனில் – அன்பு, ஒற்றுமை, பொறுமை ஆகியவற்றின் மூலம் மட்டுமே நம் வாழ்க்கையிலும், சமூகத்திலும் உண்மையான வெற்றியைப் பெற முடியும்.

அன்பான சிறுவர்களே! நீங்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம்.

நீங்கள் அறிவிலும், ஒழுக்கத்திலும், அன்பிலும் முன்னேற வேண்டும்.

உங்களின் ஒவ்வொரு செயலும் சமூகத்திற்கும், தேசத்திற்கும் ஒரு பெருமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் – அனைவரும் கைகோர்த்து இச் சிறுவர்களை நல்ல வழியில் நடத்த வேண்டும்.

அன்பால் போஷித்து, ஒழுக்கத்தால் வழிநடத்தினால், அவர்கள் நாளைய சிறந்த தலைவர்களாக உருவாகுவார்கள்.

இங்கு திறமைகளைக் காட்டிய மாணவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களும் ஞாபகச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :