ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தெரிவு செய்தமை மற்றும் அந்தப் பதவியில் அவர் செயற்படுவதை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு கோரி, இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்காத சரத் பொன்சேகாவை, பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளமையானது, பொதுமக்களின் இறைமைக்கு எதிரானது எனவும், அரசியலமைப்பின் 19வது சரத்தும் இந்த நியமனத்தின் மூலம் மீறப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவின் பதிலளிப்பவர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம், சரத் பொன்சேகா, சபாநாயகர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட எட்டுப் பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.