நோயாளர்களை சிரமத்துக்குள் தள்ளி மீண்டும் வீதியில் இறங்க முற்பட்டால், நாமும் வீதிக்கு இறங்கத் தயார், அந்த விளையாட்டுக்கு தயாராகாதீர்கள், உங்களுடன் எல்லோரும் இல்லை, பலர் என்னை அனுகி அதனை தெரிவித்துள்ளனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று சிறிகொத்தவில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
"நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உதவியுடன் பாரிய பேரணி ஒன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம் அந்த பேரணியில் இணைய தீர்மானித்துள்ளோம்.
விஷேடமாக ஐக்கிய தேசிய முன்னணி நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அதனை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
ஐந்து வருடங்களுக்குள் 10 இலட்சம் பேருக்கு வேலை வழங்க எங்களது சந்தையூடாக மட்டும் முடியாது, 1977ம் ஆண்டில் இருந்து எமது வேலை வாய்ப்புகளுக்காக வௌிநாட்டு ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்கிறோம் அன்று நாம் பெரும்பாலும் ஐரோப்பாவின் ஒத்துழைப்பை பெற்றோம். இன்று ஆசியாவுடன் இணைந்து நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம். விஷேடமாக இந்தியா மற்றும் சீனா இதில் முக்கியம் பெறுகின்றன. சிங்கப்பூர், சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னர், முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளுக்காக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டது. இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் இந்த வேலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு வௌியிடுவோரும் உள்ளனர்.
நான் அவர்களுக்கு சொல்கிறேன், நாங்கள் செல்லும் வேகம் குறைவானால் எங்களுக்கு பேசுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன், ஆனால் இந்த பயணத்தை நிறுத்த யாருக்கும் முடியாது. அனைத்து இடைஞ்சல்களுக்கும் முகம் கொடுக்கத் தயார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவர்களது செயற்பாடுகள் குறித்து ஆராய இரகசிய பொலிஸாரை அனுப்பியுள்ளதாகவே அந்தக் குற்றச்சாட்டு. அரச வைத்திய அதிகாரிகளின் கடமை வர்த்தக ஒப்பந்தங்களை ஆராய்வது அல்ல, அந்த சங்கத்தில் தற்போதுள்ள அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் ஓடிய போது, நாம் மக்களின் ஆணையைப் பெற்றோம். அதன் பின்னர் பாதெனிய தலைமையிலான குழு என்னை வந்து சந்தித்து.
தற்போது மீண்டும் அவர்கள் அதே வகையில் செயற்படுவார்களாயின் நாம் அரசியல் ரீதியில் பதிலளித்து அந்த அமைப்பை அரசியல் அமைப்பாக ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்காக கடைக்கு சென்றனர், அதனை நிரூபிக்க சாட்சியுள்ளது, இது தொடர்பில் பேச வேண்டாம் என அவர்கள் என்னை சந்தித்து குறிப்பிட்டனர்.
இந்த நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும், இதனை எதிர்க்க அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு முற்றாக பொய்யானது, அவர்களது குற்றச் சாட்டு குறித்து நான் ஆராய்ந்தேன். பொலிஸாரிடமும் அறிக்கையை பெற்றுக் கொண்டேன், வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக பொலிஸில் விஷேட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை பொலிஸார் விசாரித்துள்ளனர்.
அந்த முறைப்பாடு உண்மையா பொய்யா என்பது எனக்குத் தெரியாது, இது புதுமையான விடயம், எவரேனும் சென்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்தால் அது எனக்கு மேல் வருகிறது. தற்போது அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனராம். யாரேனும் பிழை செய்தால் பொலிஸார் விசாரணை செய்வர், நாம் அதில் தலையிட மாட்டோம், பொலிஸாரின் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம்.
அரசியல் செய்வதாயின் அரசியல் சங்கமாக நடந்து கொள்ளுங்கள், தற்போது அந்த விளையாட்டை நிறுத்துங்கள், நோயாளர்களை சிரமத்துக்குள் தள்ளி மீண்டும் வீதியில் இறங்க முற்பட்டால் நாமும் வீதிக்கு இறங்கத் தயார், அதற்கு நல்ல பதில் கிடைக்கும், அந்த விளையாட்டுக்கு தயாராகாதீர்கள், உங்களுடன் எல்லோரும் இல்லை, பலர் என்னை அனுகி அதனை தெரிவித்துள்ளனர்." என அவர் கூறியுள்ளார்.