சிறுபான்மையின மக்களிடம் வேலுகுமார் எம்.பி. கோரிக்கை
“ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களித்தால் அது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும். எனவே, இரு பிரதான வேட்பாளர்களிலும் ஒப்பீட்டு ரீதியில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நம்பிக்கையான வேட்பாளராக வலம்வரும் சஜித் பிரேமதாசவுக்கே நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும்.”இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் அறைகூவல் விடுத்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி கண்டி பகுதியில் இன்று (29.10.2019) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் சிறுபான்மையின மக்களுக்கு மேற்படி அழைப்பை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“தனது வெற்றிக்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை என்ற கோதாவில் செயற்படும் கோட்டாபய ராஜபக்சவும், அவரின் சகாக்களும், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சஜித்துக்கு சென்றடையக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கின்றனர்.
இதற்காக பலவழிகளிலும் அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக தமது முழுமையான அனுசரணையில் சில தமிழ் பேசும் டம்மி வேட்பாளர்களை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியுள்ளனர்.
ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளைகளாக வலம்வரும் இவர்கள், தாங்கள்தான் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள், இனத்தின் காவலர்கள் என்றெல்லாம் பரப்புரைகளை முன்னெடுத்து வாக்குகளை சிதறடித்து, ராஜபக்சக்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். இத்தகைய காட்டிக்கொடுப்பாளர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என உறுதியாக நம்புகின்றோம்.
அதேவேளை, மாற்றத்தை ஏற்படுத்தபோவதாக ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ள தேசிய மக்கள் சக்தியும், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை வேட்டையாடும் நோக்கிலேயே பரப்புரைகளை முன்னெடுத்துவருகின்றது.
அரசியலில் நேர்வழியில் பயணித்தாலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாக்குவங்கி ஜே.வி.பியிடம் இல்லை. வெற்றிபெறமுடியாது என தெரிந்தும், அடுத்த தேர்தலுக்கான ஒத்திகையாகவே இந்த ஜனாதிபதி தேர்தலை ஜே.வி.பியின் பார்க்கின்றனர்.
எனவே, ஜே.வி.பியின் தூரநோக்கு என்னவென புரியாமல், அவர்களின் உரைகளுக்கு மயங்கி, சிறுபான்மையின இளைஞர்கள் சிலர் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
சிறுபான்மையின மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்கவுள்ளனர். எனவே, அந்த வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுத்தால் அது கோட்டாவின் வெற்றிக்கே வழிவகுக்கும். அவ்வாறு நடைபெற்றால் மீண்டும் அராஜக ஆட்சி தலைதூக்கும். இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்க வேண்டிவரும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள்மீது சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். அதற்கான மாற்று தேர்வு தேசிய மக்கள் சக்தி கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். புரட்சிகரமான மாற்றத்தை நோக்கி பயணிக்கவே இளம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நம்மில் ஒருவராக நாம் களமிறக்கியுள்ளோம். அவரின் வெற்றியிலேயே தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும் தங்கியுள்ளது.
ஆகவே, சொல் ஜாலங்களுக்கு மயங்கி, போலி வாக்குறுதிகளுக்கு ஏமாந்து எமது வாக்குகளை சிதறடிக்கும் வகையில் நாம் செயற்படக்கூடாது.” என்றார்.