முதியோர்களும் அவர்களின் உளவள மேம்பாடும்


முதியோர்கள் என்பவர்கள் சமூகத்தில் இன்றியமையாத ஒரு அங்கமாகும். முதுமைப்பருவமானது மனித வளர்ச்சி மற்றும் விருத்திப்படிநிலையில் இறுதியாகவுள்ள ஒரு கட்டமாகும். இன்று பொதுவாக மனிதனில் 60 வயதெல்லையைத் தாண்டியவர்கள் அனைவரையும் முதியோர்கள் என்ற வட்டத்திற்குள் வரையறுகின்றனர். 'ஒவரின் உடலில் உள்ள கலங்களிலும் தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவரது தொழிற்பாடுகளில் (உடல், மூளை சம்பந்தப்பட்ட) ஒரு படிப்படியான தேய்வு ஏற்படுகின்ற நிலையே முதுமை' என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. (தமிழர் சமுதாயத்தில் உளநலம், பக்:191)

இவ்வாறான முதுமையானது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அனைவரும் இறப்புவரை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டமாகும் என்பதனை எவரும் மறுக்க முடியாது. இன்று உலகில் முதியவர்களின் தொகை சுமார் 800 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் இலங்கையில் சுமார் 2.2மில்லியனை அடைந்துள்ளதாகவும், இது மொத்த சனத்தொகையில் 12 வீதமாகும் எனவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான முதியோர்கள் அனைவரும் நமது சமூகத்தில் பெறுமதியானவர்களாவர். இவர்களுக்கான பராமரிப்பில் எந்தவொரு சமூகமும் கரிசனையற்று பராமுகமாக இருக்கக்கூடாது. ஏனெனில், இவர்கள் முதிர்ந்த அனுபவமும் அறிவும் முதிர்ச்சியும் பெற்றவர்கள். 'எந்தவொரு மனிதனையும் இறைவன் இவ்வுலகில் வீணாகப் படைக்கவில்லை' என்ற நியதிக்கேற்ப்ப மனிதனது முதுமைப்பருவத்தில் கூட நாம் அவர்களை ஒதுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது.

அன்பு, காப்பு, கணிப்பு போன்ற தேவைப்படிநிலைகளில் கூட இவர்கள் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள். அவர்களுக்கான கடப்பாட்டிலிருந்து எவரும் விலகிச் செல்லமுடியாது. ஒரு சமூகத்தில் நல்ல ஆரோக்கியமான முதியோர்கள் இருப்பதானது அச்சமூகமடைந்த வரப்பிரசாதமாகும்.

மனிதன் குழந்தையாகப் பிறந்த நிலையில், அவனது குழந்தைப்பருவத்தில் அவனுக்கு எந்தவொரு குறைபாடும் நேராமலும் ஆபத்துக்கள், நோய்கள் மற்றும் அனர்த்தங்கள் வராமலும் அதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு அவனது பெற்றோர்கள் எடுக்கின்ற பிரயத்தனங்கள் மற்றும் முயற்சிகள் போன்றுதான், அவனது பெற்றோர்கள் முதுமைப்பருவத்தினை அடையும்போது குழந்தை போன்ற நடத்தைகளை வெளிக்காட்ட முனைவர்.

அப்போது, அப்பிள்ளை தன்னைக் கண்காணித்து வளர்த்தது போல் தனது பெற்றோரையும் அவர்களது முதுமைப்பருவத்தில் எக்குறையும் ஏற்படாது கண்காணித்து பாதுகாப்பது கட்டாயக் கடமையாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

ஆனால், இன்றைய உலகில் இவற்றிற்கு மாறான செயற்பாடுகள் பெரும்பாலானவர்களால் தமது முதுமை வயதுடைய பெற்றோருக்கு எதிராக இழைக்கப்பட்டுவருகின்றன.

அண்மையில், ஒரு முதியவர் தன்னை முறையாக தனது மகன் பராமரிக்க மறுக்கின்றார். எனக்கு அவர் மாதாந்தம் தருகின்ற பராமரிப்புத் தொகையான ரூபா.2000.00ஐக் கூட தரமறுக்கின்றார். எனவே, எனக்கு முறையான ஆலோசனையை வழங்குமாறு கேட்டு சட்டத்தரணி ஒருவரின் உதவியை அம்முதியவர் நாடியுள்ளார்.

அப்போது, அச்சட்டத்தரணி அவரது மகனை அழைத்து நிலைமையை விளக்கியுள்ளார். மேலும், அந்த பராமரிப்புத் தொகையையும் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனாலும், அவரது மகன் விதண்டாவாதம் புரிந்து தந்தையின் கோரிக்கையை புறக்கணித்துள்ளார். இதன் பின்னர், அச்சட்டத்தரணி நீதி மன்றில் அவரது மகனுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன்போது, நீதிவான் இவ்வழக்கை விசாரித்து விட்டுத் தீர்ப்பாக, உரிய முதியவரின் மகன் பராமரிப்புக் கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 5,000.00 வழங்க வேண்டும். தவறின் 06மாதங்கள் சிறைவாசம் செல்ல வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒரு சிறந்த தீர்ப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், இன்றைய இளஞ் சந்ததியினரில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோர் முதுமையை அடைந்ததும் அவர்களை கிழடு, உதவாக்கரை, வயசு, நோய்களின் உறைவிடம் என்றெல்லாம் விமர்சித்து, அவர்களை ஒதுக்கிவிட முனைகின்றனர். அத்தோடு, அவர்கள் தங்களது வாழ்க்கைக்கு இதுவொரு சாபக்கேடு, இடைஞ்சல் என்றெண்ணி, முதியோர் இல்லங்களில் அல்லது வீட்டின் ஒரு ஒதுக்குப்புறத்தில் அவர்களை ஒதுக்கி விடுகின்றனர். இவ்வாறான நிலைமைகள் நமது இன்றைய சமூகத்திலும் காணப்படுவதற்கான காரணம், உலகமயமாக்களால் கலாச்சாரங்களிலும் பண்பாடுகளிலும் ஏற்படுத்தப்பட்ட நேரெதிரான தாக்கங்களின் விளைவுகளாகவும் கருத்தியல் மாற்றங்களாகவும் கருதவேண்டியுள்ளது எனலாம்.

இதனால், பெரும்பாலான முதியோர்கள் இன்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள நெருக்கீடுகளுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆட்பட்டு அல்லல் படுகின்ற தெருவோரங்களில் தூங்கிக் கழிக்கின்ற அவல நிலையை இன்றைய சூழலில் நாம் காண முடியும்.

இன்று நமது சமூகத்திலுள்ள பெரும்பாலான முதியோர்கள் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அந்தவகையில், பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.

 உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடல்சார் நோய்கள்:
மனிதனின் வயது செல்லச் செல்ல அவனது உடலானது பல்வேறு வழிகளிலும் தளர்வடைவது இயல்பாகும். அவனது உடல்பாகங்கள் மற்றும் அவனது ஐம்பொறிகள் என்பன பலவீனமான நிலையை அடைகின்றது. இதன்போது, முதியவர்கள் தங்களது வழமையான செயற்பாடுகளிலிருந்து சற்று சோர்வடைந்த நிலையினை அடைவார்கள். இவ்வாறானவர்கள் நோய்த்தாக்கத்திற்கு இலகுவாக ஆட்படக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.
வாதநோய்கள், பார்வைக்குறைபாடு, சிறு நீர் தொடர்பான நோய்கள், இருதய நோய்கள், சுவாச நோய்கள், மற்றும் நீரிழிவு வியாதி போன்ற நோய்களுக்கு இப்பருவத்திலுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

ஆனாலும், இவ்விடயத்தில் சிலர் விதிவிலக்காகக் காணப்படுவர். காரணம் அவர்கள் தங்களது இளமைக்காலத்தில் சுகந்தமான நிலையை அனுபவித்தவர்களாகவும் தங்களது உடல் ஆரோக்கியத்திலும் தங்களது சுய கவனிப்பிலும் பூரணமான கவனம் செலுத்தி வந்தவர்களாகவும் காணப்பட்டமையினாலேயே ஆகும்.

 உள ரீதியான பிரச்சினைகள்:
முதுமையில் உடல் நிலையைப் போன்று, உளமும் பாதிக்கப்படுகின்ற நிலையை அவதானிக்க முடியும். அந்தவகையில், முதுமையில் உளநலத்தைப் பாதிக்கும் காரணிகளாக பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

1. உடற்காரணிகள்:
முதுமை நிலையின் போது தனது உடலின் தன்மைகள் மற்றும் இயக்கப்பாடுகள் தளர்வடைகின்ற போது, இயல்பாகவே உளம் அதைப்பற்றிய நேரெதிரான உணர்வினை அடையும். இதனால் அம்முதியோரின் எண்ணம், சிந்தனை மற்றும் மனப்பாங்கு என்பனவற்றில் பல்வேறு வேண்டத்தகாத மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும்.

2. உளக்காரணிகள்:
முதுமை பற்றி ஒருவர் கொண்டிருக்கின்ற கருத்து நிலையும், அவர் இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பின்னணியும், அவரது தனிப்பட்ட ஆளுமைக் காரணிகளும் இணைந்தே முதுமையில் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களுக்கு காரணமாகின்றன. (முதுமை (2001), பக்: 38)
முதுமை அடைகின்றபோதும் முதுமையான நிலையின் போதும் ஒரு மனிதன் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க முனைவது இயல்பாகும். இவ்வாறான நிலைமையானது அம்மனிதனால் விரும்பி ஏற்கப்படக்கூடியதொன்றல்ல. இந்நிலையின்போது ஒரு முதியவர் தனது வாழ்நாள், தனது வாழ்வின் முடிவு, தனது பராமிப்பு, தன்மீது குடும்பத்திலுள்ள பிள்ளைகள் மற்றும் உறவுகள் காட்டுகின்ற அசிரத்தையான கவனம், தமக்குத் தேவையான நாளாந்த செலவினங்களை தீர்த்துக் கொள்வதிலுள்ள சவால்கள், தன்னில் குடும்பமும் அயலவர்களும் சமூகமும் ஏற்படுத்துகின்ற புறக்கணிப்புக்கள், தனது தேவைகளை பூர்த்தி செய்வதிலுள்ள இயலாமைகள், தனக்கான பொழுது போக்குகளை கழிப்பதற்கான வசதிகள் இன்மை, தனக்கான வருமானம், தனது நிறைவேற்றப்படாத ஆசைகள், தனது வாழ்கைத்துணை பற்றிய அக்கரை போன்ற அம்சங்களில் கவலையும் சோகமும் நெருக்கீடும் அடைந்த நிலையில் காணப்படுவார். இதனால், அவரது உள்ளமானது பாதிக்கப்பட்டதாகக் காணப்படும். அத்தோடு, ஒருவரின் முன்னைய வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட அசாதாரன நிலைமைகள் பெரும்பாலும் முதுமையில் உளநலத்தை பாதிக்கின்ற அம்சமாகக் காணப்படுகின்றது. இப்பருவ உளப்பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இரு விதமாகப் பிரிக்க முடியும்.

1. மிதமான உளப் பிரச்சினைகள்:

பதகளிப்பு: உடல் தளர்வு மற்றும் மாறுதல்களினால் ஏற்படுகின்ற பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அச்சம் போன்வளவற்றால் இவ்வாறான பிரச்சினை ஏற்படும்.
 மனச்சோர்வு: கடந்த கால வாழ்க்கையை எண்ணி விரக்தியடைதலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனமும் இவ்வாறான நிலையை ஏற்படுத்தும்

 மெய்ப்பாட்டுநோய்:

தனது முதுமையில் ஏற்படுகின்ற துன்பியல் நிலைகளினை நாளாந்தம் எண்ணி கவலையுடனும் துக்கத்துடனும் வாழ்கின்றபோது, மனமானது அசாதாரன நிலைமைகளை அடைகின்றது. இதனால் உடலானது பல்வேறு நோவுகள் சார்ந்த வெளிப்படுத்தலினை ஏற்படுத்தும்.

 வெறும் கூட்டு நிலை (நுஅpவல நேளவ ளுலனெசழஅந): பிள்ளைகள் மற்றும் உறவுகளின் பிரிவு, இடப்பெயர்வு போன்ற காரணங்களால் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது ஏற்படுகின்ற வெறுமையை உணர்கின்ற நிலையையே இது குறிக்கும்.
 இறப்பு பற்றிய அச்சம் மற்றும் பீதி நிலை

இவ்வாறான பிரச்சினைகள் முறையாக அணுகப்படுவதன் மூலமும் ஒரு உளவளத்துணையாளரின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமும் பல்வேறு ஆரோக்கியமான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதன் மூலமும் தீர்வு காணப்படமுடியும்.

2. பாரிய உளப்பிரச்சினை:

ழ சந்தேக உளமாய நோய் (Pயசயழெனை Pளலஉhழளளை): ஏற்கனவே நாட்பட்ட நோய்களையுடையவர்கள் மற்றும் சந்தேக ஆளுமையுடையவர்களிலும் இது ஏற்படும். அதிகமாக இது முதுமை நிலையின் போது கூடுதலாகக் காணப்படும்.
ழ அறளை பெயர்தல் (னுநஅநவெயை): மூளையின் கலங்கள் படிப்படியாக இறந்தழிந்து போவதனாலும் பல்வேறு உடல் நோய்களினாலும் உருவாகின்றது. ஞாபக மறதி, மாறாட்டம், குழப்பமான பேச்சு, உணர்ச்சிக் குழப்பங்கள், மாயப் புலனுணர்வு, தற்கவனக் குறைவு மற்றும் ஆளுமைத்தேய்வு என்பன உருவாகும். இவைகள் அறளை பெயர்தலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படும் அறிகுறிகளாகும்.

இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு ஒரு உளமருத்துவரின் (Pளலஉhயைவசளைவ) உதவி இன்றிமையாததொன்றாகும். அத்தோடு, இவ்வாறான முதியோர்களை பராமரிக்கின்றவர்களுக்கு முறையான ஆலோசனைகளும் உளவளத்துணை வழிகாட்டலும் வழங்கப்படுவதற்கு உளவளத்துணையாளரின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமும் பல்வேறு ஆரோக்கியமான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதன் மூலமும் தீர்வு காணப்படமுடியும்.

ஆனாலும், இவ்வாறான நிலையிலிருந்தும் பல்வேறு முதியவர்கள் விதிவிலக்குப் பெற்றுக் காணப்படுவர். ஏனெனில், அவர்களது உள்ளமானது எந்தவொரு பிரச்சினையின் போதும் தளர்வடையாது அதற்கு முகங்கொடுத்து, அவற்றை எதிர்கொண்டு வாழப்பழகியதாகக் காணப்படும்.
மேலும், சில முதியவர்கள் பெற்றுள்ள வாழ்க்கைப்பாக்கியமும் ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கும். அதாவது, அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் அவர்கள் பெற்றுள்ள வசதிவாய்ப்புக்கள் என்பனவும் இவ்வாறான முதியவர்களின் மனத்தளர்வு நிலையிலிருந்து அவர்களை பாதுகாக்க வழிசெய்யும் என்பதில் ஐய்யமில்லை.

3. சமூகக்காரணிகள்:

நாளாந்தம் சமூகத்தில் முதியவர்கள் எதிர்கொள்கின்ற எதிர்வினைகள் மற்றும் அச்சமூகத்தில் முதியவர்கள் தொடர்பாக நிலவுகின்ற தவறான கருத்தியல்கள் மற்றும் சிந்தனைகள் என்பனவும் முதியவர்கள் தொடர்பான மோசமான சமூகப் புலப்பார்வையும் அச்சமூகத்திலுள்ள முதியவர்களின் உள ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமின்மைகளில் தாக்கம் செலுத்துவதனைக் காணமுடியும். குறிப்பாக ஒரு சமூகத்திலுள்ள இளைய சமூகம் முதியவர்களின் பால் காட்டுகின்ற கரிசனையும் ஆர்வமும் அதன்பரிமானமும் அச்சமூகம் முதியவர்கள் தொடர்பாகக் கொண்டிருக்கின்ற அபிப்பிராயத்திலேயே தங்கியுள்ளது எனக்குறிப்பிட முடியும்.
அதுமாத்திரமன்றி, ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கான சகல நகர்வுகளிலும் இம்முதியோர்கள் வளமாகப் பார்க்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்கள் மற்றும் சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்படவேண்டும்.

4. மதகலாசாரக்காரணிகள்:

அடுத்து, ஒரு சமூகம் கடைப்பிடிக்கின்ற மதக்கலாசார நம்பிக்கை மற்றும் விழுமியங்களும் அச்சமூகத்திலுள்ள முதியவர்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதனின் முதுமையான நிலையின்போது அம்மனிதன் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் அவனுக்குள்ள கடப்பாடுகள் பற்றியும் அவன்பால் அச்சமூகம் கொண்டிருக்க வேண்டிய கடப்பாடுகள் பொறுப்புக்கள் பற்றியும் மார்க்கங்கள் தெளிவான வழிகாட்டலை வழங்கியிருக்கும். இவ்வாறான வழிகாட்டல்கள் கூட முதியவர்களை வழிநடத்துவதில் ஆதிக்கம் செலுத்துவதாக அமைகின்றது.


முதியோர்களின் உளவளத்தை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகள் வருமாறு:

1. முதியோர்களின் பிரச்சினைகள் கூர்மையாகவும் முறையாகவும் ஆராயப்படல். அந்தவகையில், உடல், உள்ளம், ஆன்மீகம், பொருளாதாரம் மற்றும் அடிப்படைத்தேவைகள் இங்கு கருத்திற்கொள்ளப்படல் வேண்டும். அதனை நிவர்த்திப்பதற்கான முறையான திட்டங்கள் முன்னெடுக்கப்படல். அத்தோடு சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

2. அத்தோடு அவர்களது அன்பு, காப்பு, கணிப்பு போன்ற தேவைகளுக்கான தீர்வுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படல்.
3. முதுமையை எதிர்கொள்வதற்காக வேண்டி அவர்களை முன் கூட்டியே தயார்படுத்துதல் வேண்டும். முதுமையின் வயதெல்லையை எதிர்நோக்குபவர்களை இனங்கண்டு இதற்காக தயார் செய்ய முடியும்.
4. நல்ல, போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு தவறாது வழங்குதல் வேண்டும்.

5. நல்ல பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்திக கொடுத்தல். மற்றும் அவர்களது தனிமையை போக்க வழிசெய்தல்.
6. அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்த்து மதிப்பளித்தல். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களது ஆலோசனைகளை கேட்டு நடத்தல்.
7. தியானம் மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளில் நாளாந்தம ஈடுபட வழிகாட்டுதல்.

8. ஆத்மீகம் சார்ந்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடத் தூண்டுதல்.
9. அவர்களை சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட ஏற்பாடு செய்தல்.
10. மதுபானம் மற்றும் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட வழிகாட்டுதல்.

11. நோய் நிலைமைகளின் போது முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுத்தல்.

12. இம்முதுமைக் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொருத்தமான வழிமுறைகளின் கீழ் அவர்களை விழிப்பூட்டுதல்.

எனவே முதியோர்கள் சமூகத்தில் இன்றியமையாத ஒரு அங்கமாகும். அந்தவகையில் அவர்களது பிரச்சினைகளும் தேவைகளும் முறையாக குடும்பங்களினாலும் சமூகத்தினாலும் கையாழப்படல் வேண்டும். குறிப்பாக அவர்களது ஆரோக்கியத்திலும் சீவியத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற உளம் வளமானதாக அவர்களது மரணம் வரை இருப்பதற்கு காத்திரமான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படல் வேண்டும்.

இவ்வாறான முதியோர்கள் எதிர்கொள்ளும் வேண்டத்தகாத பிரச்சினைகளும் நிலைமைகளும் மாறவேண்டும். ஏனெனில், ஓரு சமூகம் வளம்பெற வேண்டுமானால், இறைவனின் ஆசீர்வாதம் அவசியமானதாகும். அவனது ஆசீர்வாதம் கிடைக்கப் பெறவேண்டுமானால், அச்சமூகத்திலுள்ள முதியோர்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் கௌரவத்துடனும் வழிநடாத்தப்படவேண்டும். மேலும் பராமரித்துப் பாதுகாக்கப்படவேண்டும்.


S.ஆப்தீன்-

உளவளத் துணை உத்தியோகத்தர்,
சமூக சேவைகள் அமைச்சு
பிரதேச செயலகம், அக்கரைப்பற்று.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :