கல்வி அபிவிருத்திக்கான போரம் (EDF) ஏற்பாடு செய்து நடத்திய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்தி அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் போரத்தின் தலைவர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் (28) நடைபெற்றது.
காலை - மாலை என இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் காலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்ட அதேவேளை மாலை நேரம் நடைபெற்ற அமர்வில் கல்முனை வலய பாடசாலை மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
தரம் 5 மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் செயலமர்வுகள், பயிற்சி புத்தகங்கள் என பல்வேறு வகைகளிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்து வருகின்ற EDF போரம் கடந்த 21 வருடங்களாக பரீட்சையில் சித்தி அடையும் மாணவர்களை அவர்களது பெற்றோர் முன்னிலையில் வாழ்த்தி பாராட்டுகின்ற இந்த நிகழ்வை நடத்தி வருகின்றனர். நாட்டின் சகல மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக போரத்தின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.ஐ.நெளபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இதேவேளை நிகழ்வின் போது, தரம்5 புலமை பரிசில் பரீட்சையில் அதிகமான மாணவர்கள் தெரிவாகி சிறந்த அடைவுகளை வெளிப்படுத்திய பாடசாலையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பாடசாலைகளின் சார்பில் நிகழ்விற்கு வருகை தந்த பிரதிநிதிகளுக்கு இந்த விசேட சிறப்பு நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வைத்தியர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment