"சட்டக் களஞ்சியம்" அன்வர் பாதுஷா உலவி, "சொல்லின் செல்வர்" அப்துல் காதிர் மிஸ்பாஹி பங்கேற்பு!!
குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 15ம் ஆண்டு ஐம்பெரும் விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (நவம்பர் 7, 2019) அன்று குவைத்தில் உள்ள கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள அல் ஷாயா பள்ளிவாசல் அரங்கில் 15ம் ஆண்டு சீரத்துன் நபி விழா, சமய நல்லிணக்க விழா, 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு மற்றும் வாழ்த்தரங்கம் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ மற்றும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மேனாள் பொருளாளர் மவ்லவீ ஏ.கே.ஏ. அப்துல் காதிர் மிஸ்பாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். குவைத் இந்தியத் தூதர் மேதகு ஜீவசாகர் மற்றும் குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரி அஷ்ஷைஃக் முஹம்மது அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் 124 பக்கங்களை உள்ளடக்கிய குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. குவைத் டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட குவைத் தொழிலதிபர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.
சனிக்கிழமை (நவம்பர் 9) அன்று கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், வெற்றிக்கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் & அன்பளிப்புகள் வழங்குதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது.
அவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் வேல்முருகன் அவர்களுக்கு ‘வாழ்வுரிமை நாயகன்’, அன்வர் பாதுஷா உலவீ அவர்களுக்கு ‘சட்டக் களஞ்சியம்’ மற்றும் அப்துல் காதிர் மிஸ்பாஹி அவர்களுக்கு ‘சொல்லின் செல்வர்’ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. குவைத் அவ்காஃப் அமைச்சகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சிறப்பு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
மூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 3,000 (மூவாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், மதிய உணவு, இரவு உணவுகள், தேநீர், குடிநீர் மற்றும் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய... https://m.facebook.com/story.php?story_fbid=3228363137237499&id=365350416872133
சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகளை சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களான www.k-tic.com, www.facebook.com/q8tic, www.youtube.com/Ktic12 மற்றும் www.twitter.com/@q8_tic ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482