அண்மையில் சிங்கள மொழியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இடை வேளையின் போது முஸ்லிம்களின் சமய உயர்சபையை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்திருந்தார்.
பின்னர் அது பற்றி அவர் அளித்த முகநூல் விடியோவில் முஸ்லிம்களே ஊரடங்கு சட்டத்தை மீறுகிறார்கள் எனவும் இதனை முஸ்லிம்களுக்கு புரிய வைத்து அவர்களை வைரசிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே இதனை பேசியதாகவும் கூறியிருந்தார்.
உண்மையில் நாம் அறிந்த வரை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இனவாதம் இல்லாத ஒரு அரசியல்வாதி. தமிழில் நன்கு உரையாற்றக்கூடியவர். முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகக்கூடியவர். அத்தகைய ஒருவரிடம் இருந்து இத்தகைய வார்த்தை வந்தமை மிகவும் கவலைக்குரியதாகும். இந்த வகையில் இந்த அரசை ஆதரிக்கும் கட்சியாக உலமா கட்சி இருந்த போதும் இந்த அத்துமீறலை எம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
அத்துடன் முஸ்லிம்களில் சிலர் ஊரடங்கை மீறினால் அதை இனத்தை வைத்து ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதையும் ஏனைய ஊர்களில் நடைபெறும் மீறல்களை இனத்தை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வதையும் காண்கிறோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இன்று வரை சுமார் 143. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 30 பேர்தான். அவர்களின் ஊர்களான அட்டுளுகம, அக்குரணை, புத்தளம் என்பவற்றைத்தான் ஊடகங்கள் காட்டுகின்றனவே தவிர ஏனைய நூற்றுக்கணக்கான நோயாளிகள் யார் அவர்களின் ஊர்கள் எவை என்பது பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் ஊரடங்கை மீறியதால் கைது செய்யப்பட்டோர் கொழும்பு, கம்பஹ, களுத்துறை என பொலிஸ் சொல்கிறது. சுமார் பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்களா என கேட்கிறோம். இவர்கள் அனைவரும் எந்த இனங்களை சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சர் பகிரங்கமாக வெளியிடுவாரா?
எந்த சமூகத்திலும் சுய புத்தி இல்லாத தறுதலைகள் இருக்கத்தான் செய்வர். அதற்காக ஒரு இனத்தை இழுத்து குற்றம் சொல்வது மிகப்பெரும் பிழையாகும். அத்தகைய பிழையை அடிப்படையில் இனவாதியாக இல்லாத அமைச்சர் செய்தமை மிகவும் கவலையான விடயமாகும்.
ஆகவே இக்கருத்துக்காக அமைச்சர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருவதே முறையாகும்.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.