நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டை இனவாத முரண்பாடுகளுக்கப்பால் பல்வேறு சவால்களைத்தாண்டி கட்டியெழுப்ப முயற்சிப்பதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இனமுரண்பாடுகளைக் கடந்து இந்த நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம்சிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவரகின்றபோது சில இனவாதசக்திகள் மீண்டும் மீண்டும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளையும் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட பிரதேச வணக்கஸ்தலங்களை புனரமைக்கும் திட்டத்தின்கீழ் ஏறாவூர்- மிச்நகர் - பறகா ஜும்ஆப் பள்ளிவாயலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதி காசோலை வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு , மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஆலுஸ்ஸலாம் பா உஸ்மான் மதாசாவின் திறமையான மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.
பள்ளிவாயல் தலைவர் எம்எச். சபுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ். சுபைர், ஹிறா அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்பள்ளிவாயலில் அடிப்படை வசதிகளை ஏற்டுத்துவதற்கென ஹிறா அறக்கட்டளை நிதியம் பத்து இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில பௌத்த குருமார் எங்களுடைய சமயத்தைப் பற்றி நிந்திக்கின்றபோது நாங்களும் அதுதொடர்பிலே பல்வேறு விமர்சனங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். அவற்றை நாங்கள் அவதானமாக செய்யவேண்டும். எங்களுடைய பிரச்சினைகளுக்கு தலைவர்கள் உலமாக்கள் சமூக புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீர்வைக் காணவேண்டும்.
நீண்டகால நோக்கில் மத ரீதியான பிளவுகள் வராது தடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது என்றார்.