கரையோர அழகுபடுத்தல் திட்டத்தில் சாய்ந்தமருதையும் உள்வாங்குமாறு அமைச்சர்ஹக்கீமிடம் ஷூரா கவுன்ஸில் கோரிக்கை

காரைதீவுநிருபர் சகா-

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரையோர பிரதேசங்களின் அழகுபடுத்தல் திட்டத்திற்கு நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சினால் ஏழு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் இவ்வேலைத் திட்டத்தினுள் சாய்ந்தமருது பிரதேசம் உள்வாங்கப்படாமல் புறக்கணிப்பு செய்யப்பட்டிருப்பதாக சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டியுள்ளது .

இவ்விடயம் தொடர்பில் ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் ஆகியோர் கையொப்பமிட்டு, அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கரையோர பிரதேசங்களின் அழகுபடுத்தல் திட்டத்திற்கு தங்களின் அமைச்சு மூலம் ஏழு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றோம்.

ஆனால் இந்நிதியானது ஒரு சில பிரதேசங்களுக்கு மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவு முற்றாக புறக்கணிப்பு செய்யப்பட்டிருப்பதை அறிந்து எமது ஷூரா கவுன்ஸில் அதிர்ச்சியடைந்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான புறக்கணிப்புகள், பாரபட்சங்கள் காரணமாகவே சாய்ந்தமருதுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

சாய்ந்தமருது கடற்கரையோரம் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்ற அதேவேளை இங்கு நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவானது நிறைவு செய்யப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டிருப்பதும் பொது மக்களுக்கு பொழுது போக்குவதற்கு பொருத்தமான இடங்கள் இல்லாதிருப்பதும் தாங்கள் அறியாத விடயமல்ல.

ஆகையினால் இது விடயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, கடற்கரையோர அழகுபடுத்தல் திட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தையும் உள்வாங்கி, நியாமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்" என்று அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.ஹனிபா ஆகியோருக்கும் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஷூரா கவுன்ஸில் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -