நாட்டின் பல பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை குடும்ப மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்குவதற்காக ஹாசிம் உமர் பௌண்டேசன் ஒரு அரிய பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கொழும்பில் உள்ள பௌண்டேசனின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
கடந்த 12 மாதங்களில், ஹாசிம் உமர் பௌண்டேசன் மூலமாக நாடு முழுவதும் மூன்று இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 75 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. “நவீன உலகில் உயர்கல்வி பெற தொழில்நுட்ப வசதிகள் அவசியம். ஆனால் பல மாணவர்கள் வறுமையால் இவ்வசதிகளை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அந்த இடைவெளியை நாங்கள் நிரப்ப விரும்புகிறோம்,” என பௌண்டேசனின் நிறுவனர் மற்றும் தலைவர், தொழிலதிபர் ஹாசிம் உமர் தெரிவித்தார்.
கடந்த 06.09.2025ஆம் திகதி மடிகனனிகள் வழங்கும் நிகழ்வில், வவுனியா, காலி, கம்பஹா, பதுளை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் பயனடைந்தனர். மாணவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, அவர்களின் பெற்றோரின் கண்களில் ஒளிந்திருந்த பெருமிதம், நிகழ்வை சிறப்பித்தது.
இந்நிகழ்வில் ஐ.டி.என். செய்தி முகாமையாளர் நலீந்தா பெரேரா தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கையளித்தார். மேலும், தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் செந்தில் வேலாவேர், ஐ.டி.என். தமிழ் செய்தி உதவி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். ஜாஃபர் உள்ளிட்ட ஊடகப் பிரதிநிதிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
“எங்கள் நோக்கம் வெறும் மடிக்கணினி வழங்குவதே அல்ல. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளைத் திறந்து வைப்பதே எங்கள் குறிக்கோள்,” என்று ஹாசிம் உமர் வலியுறுத்தினார். இவ்வகைச் சேவைகள், மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அவர்களை உலகளவில் போட்டியிடக் கூடியவர்களாக மாற்றும் முயற்சியாகும்.
இந்த மடிக்கணினிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களின் பெற்றோர், “நாங்கள் கனவிலும் நினைக்காத உதவியை எங்கள் பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் இத்தகைய சமூகச் சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்,” என நன்றியுணர்வுடன் தெரிவித்தனர்.
ஹாசிம் உமர் பௌண்டேசனின் மடிக்கணினி வழங்கும் இந்த முயற்சி, பின்தங்கிய மாணவர்களின் கல்வி பயணத்தில் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறது. நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் இத்தகைய தொண்டு முயற்சிகள், கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தும் ஓர் அரிய உதாரணமாகும்.

0 comments :
Post a Comment