சாய்ந்தமருதின் தென்புற நுழைவாயிலில் அமைக்கப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எதுவித வாசகமும் எழுதப்படாமல் இருந்த வரவேற்பு வளைவானது கவனிப்பாரற்ற நிலையில் இருந்ததை சகலரும் அறிவர்.
அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் எதுவித வாசகமும் எழுதப்படாமல் இவ்வளவு காலமும் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ஏன் என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றதாயினும், இப்போது இதனைப்பற்றிக் கதைப்பதாலோ அல்லது விமர்சிப்பதாலோ எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.
எது எவ்வாறாயினும், கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. ஏ. பசீர் அவர்கள் அந்த வரவேற்பு வளைவைப் புனரமைத்து வரவேற்பு வாசகத்தையும் எழுதவேண்டும் எனப் பிரேரணையொன்றைச் சபைக்கு சமர்ப்பித்து தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.
மாதங்கள் சில கடந்தாயினும் தற்போது அது புனரமைக்கப்பட்டு வரவேற்பு வாசகமும் எழுதப்பட்டிருக்கின்றது. தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் பிறந்த தினமான 23. 10. 2014ம் திகதி அதனைத் திறந்து வைக்குமுகமாகவே அவசரமாக அது முடிக்கப்பட்டிருக்கின்றது.
எழுதப்பட்டுள்ள வரவேற்பு வாசகம் பற்றி பலவிதமான அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும், இப்போதைக்கு இந்த வாசகம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவே இருக்கின்றது. இந்த விடயத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை முன்னிலைப்படுத்தி அலசுவதன் மூலமும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
எனவே, இது சம்பந்தமாக சபைக்கு பிரேரணையைச் சமர்ப்பித்து அதில் வெற்றி கண்ட மாநகர சபை உறுப்பினர் ஏ. ஏ. பசீர் அவர்களையும், அதற்கு தைரியமாக பச்சைக்கொடி காட்டிய மேயர் நிசாம் காரியப்பர் அவர்களையும் பாராட்டுவதுடன், இதற்கு பக்கபலமாக இருந்த மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் அவர்களையும் பாராட்ட வேண்டும்.
0 comments :
Post a Comment