தரம் 1இல் புதிய மாணவர்களை இனங்காண்கின்ற செயற்பாடுகளை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்!புத்தாண்டு பிறப்புடன் பாடசாலைகளும் தனது புதிய வரவுகளான புதிய மாணவர்களை வரவேற்பதிலும், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டனர். தரம் ஒன்றில் இணைகின்ற மாணவர்களுக்கான தேசிய வைபவம் நாடுமுழுவதிலுமுள்ள ஆரம்பப்பிரிவு வகுப்புக்கள் காணப்படுகின்ற பாடசலைகளில் கடந்த ஜனவரி 16ஆந்திகதி நடைபெற்றது.

 அன்றைய தினம் மாணவர்கள் வரவேற்கப்பட்டு வித்தியாரம்ப நிகழ்வுகள் கல்வியதிகாரிகள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலதரப்பட்டோர் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேற்றப்பட்டன. தரம் ஒன்றில் பிரவேசிக்கும் மாணவர்களை அறிந்து கொள்ளும் வகையில் இரண்டு வாரங்கள் புதிய மாணவர்கள் தங்களுடைய பாடசாலைக்குள் கலக்கமின்றி காலடி எடுத்துவைப்பதற்கு ஏதுவாக சில முன்னேற்பாடுகளும் பல பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அது பிள்ளைகளை இனங்காண்பதற்கான செயற்பாடுகள் எனக் கூறப்படுகின்றது.

ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தைத்; தொடர்ந்து முதன்மை நிலை ஒன்று, முதன்மை இரண்டு, முதன்மை நிலை 3 எனவும் பிரிக்கப்பட்டுள்ள இன்றைய ஆரம்பப்பாடசாலைகளில் தரம் ஒன்று இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கான செயற்பாடுகள் கட்டாயம் மேற்கொள்ளப்படுதல் அவசியம் என்பதை கல்வியமைச்சு திட்டமிட்டு பாடசாலைகளுக்கு சுற்றுநிருபங்கள் தொடக்கம் தேசிய கல்வி நிறுவகத்தினால் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தியும் கனிஷ்ட நிலைக் கல்வித் திணைக்களத்தினால் 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு மீண்டும் 2009ஆம் ஆண்டில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள கைந்நூலில் தெளிவாக இதற்கான வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன.

ஆனால் இச்செயற்பாடுகளை எத்தனை வீதமான பாடாசலைகள் முன்னெடுத்துச் சென்றன என்பதுதான் அடுத்த கேள்வியாகும். மாணவர்களின் பெற்றோர்களும், இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பாடசாலைகளில் புதிய மாணவர்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை சமூகத்திற்குத் தெரியப்படுத்தவும் இக்கட்டுரை உதவியாக அமையும் என்பதாலும் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

உண்மையில் யாவருக்கும் கல்வி எனும் நோக்கின் அடிப்படையில் எமது அரசு நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாகப் கல்வியை வழங்கிவருகின்றது. அது மட்டுமன்றி மாணவர்கள் மீது மேற்கொள்ள வேண்டிய கற்றல் செயற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கான விடயங்களை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. 

பயிற்சிகளுடனும், ஏனைய விடயங்களுடனும் மட்டுப்படுத்தாது ஆசிரியர் அறிவுரைப்பு நூல் வழியாக இவ்விடயங்களை வழங்கி கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பண்புத்தர விருத்தியை ஏற்படுத்துதல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் சில பாடசாலைகள் ஏனோதானோ என்கிற மனோநிலையில் காணப்படுவதானது எதிர்காலச் சந்ததிகளை சீரான முறையில் இட்டுச் செல்வதிலிருந்து விலக்களித்துவிடும் என்பதுதான் யதார்த்தமாகும்.

இன்று வகுப்பறைக்குள்ளும், வெளிச்சூழலிலும் மாணவர்களின் அறிவுவிருத்திச் செயற்பாட்டுக்குரிய அனைத்துவிதமான வழிகளையும் காண்பிப்பவர்கள் ஆசிரியர்களாவர். ஆரம்பத்திலிருந்தே பாடசாலையில் ஒரு பிள்ளை வகுப்பறைக்குள் வந்துவிட்டால் அவனைக் கவனித்து நற்பிரஜையாக்க வேண்டியதும் ஆசிரியரே.

 மேலும் பாடத்திட்டத்தால் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சி மட்டங்களை நோக்கி அந்த மாணவர்களை வழிநடாத்தும் பொறுப்புமிக்க முக்கிய நபராகவும் ஆசிரியரே காணப்படுகின்றார்.

 இத்தகைய பொறுப்புக்களை தாங்கி, உணர்ந்து செயற்படுகின்ற ஆசிரியர்கள் பெறுமதிமிக்க வளம் என்பதையும் ஆசிரியர்கள் புரிந்து அதன்பிரகாரம் நடந்து கொள்ளவேண்டும். அறிவு, திறன், மனப்பாங்கு, தேர்ச்சிகள் என்பவற்றையும், வலிமைமிக்க சமூக மற்றும் உள்ளார்ந்த திறன்களையும் கொண்ட முழுமையான பிரஜைகளை சமூகத்திற்கு வழங்கும் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் தற்கால நவீன உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நற்சமூகத்தை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் உங்களிடம் வருகின்ற மாணவர்களை அறிந்து கொள்ளாது கற்றலை மேற்கொள்ளவதானது ஒட்டைக் குடத்தினுள்ளே நீர் ஊற்றுவதுபோலாகும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுதல் முக்கியமாகும்.

அந்த வகையில் ஆரம்பக்கல்வியில் முதன் நிலையிலுள்ள தரம் ஒன்றில் ஒரு பிள்ளை பாடசாலைக்குள் வந்துவிட்டால் முறையான பாடசாலைக் கலைத்திட்டத்தினை அந்த மாணவனுக்கு வழங்குவதற்கு முன்னர் சில செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும்.

 இந்த அவசியத்தை உணர்ந்து கொள்ளாத சில பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் இடவசதி, ஆசிரியர் பற்றாக்குறை என்கறி காரணங்;களைக் காண்பித்து இந்தத் திகதியிலிருந்துதான் பாடசாலைக்கு வரவேண்டுமென அறிவித்துவிடுகின்றனர். 

கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய மாணவர்களை அறிந்து கொள்ளும் எந்த விடயங்களையும் மேற்கொள்ளாது பாடங்களை நடாத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது. கடந்த 16ஆந்திகதி நடைபெற்ற வித்தியாரம்ப நிகழ்வன்றே தரம் ஒன்றில் இணைத்துக் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு கூறியிருந்த நிலையில் இந்த மாணவர்கள் பாடசாலைக்குள் எத்தகைய மனோநிலையில் வந்திருப்பார்கள் என்பதை இந்த ஆசிரியர்களும், அதிபர்களும் உணர்ந்து கொள்ளவதிலிருந்து தவறிவிடுகின்றனர்.

தரம் ஒன்றில் சேர்ந்து கொண்ட பிள்ளைகள் முறையான கற்றலை ஆரம்பிப்பதற்கு முன்னர் வீட்டில் எவ்வாறு இருந்தார்களோ அந்த நிலையில் தான் இந்தக் குழந்தைகளை பாடசாலைக்குள்ளும் உலாவச் செய்து, ஆசிரியரையும், பாடசாலையையும் அக்குழந்தை அறிந்து புரிந்து செயற்படுவதற்கான அன்பை வழங்கவேண்டும். வீட்டுச் சூழல், முன்பள்ளி நிலையம் அதனைத் தொடர்ந்து பாடசாலையினுள்ளே வருகின்றபோது புதுவிதமான சூழல் குழந்தைகளை ஆட்கொண்டுவிடுகிறது. அத்தகைய பயப்பீதியை இல்லாமல் செய்யவும், ஆசிரியரும் எமக்குதவுகின்ற ஒருவர்தான் என்கிற தெளிவைப் பெற்றுக் கொள்ளவும், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுச் சூழலிலிருந்து பாடசாலைச் சூழலுக்குள் குழந்தைகளை தன்வயப்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த செயற்பாடுகள் துணையாக இருக்கின்றன. இதனை ஒழுங்கு முறையாக மேற்கொள்கின்றபோது குழந்தைகள் ஆசிரியரின் அன்புக்குள் சங்கமித்து முறையான கற்றலுக்குத் தன்னை தயார்படுத்தப்படுத்திக் கொள்கின்றது.

தரம் 1 இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை அறிந்து கொள்வோம் செயற்பாடுகள் 16 காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடுகளை பாடசாலை ஆரம்பித்த முதல்நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்பட்டு இறுதியாக வித்தியாரம்ப நிகழ்வுகளை நடாத்தவேண்டும்.

 ஒவ்வொரு தலைப்புக்கும் நோக்கம், பயன்படுத்தப்படுகின்ற வளங்கள், முன்ஆயத்தம், செயலொழுங்கு, அந்த மாணவர்களிடம் இனங்காணக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்கள் போன்றவைகள் இக்கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை ஆசிரியர் அறிகின்றபோது அதற்கேற்றவாறு அந்த மாணவர்களுக்கு கற்றலை வழங்கக் கூடியதாக இருக்கும் அந்த வகையில் பார்ப்போமானால் மேற்கொள்ளப்படவேண்டிய முதலாவது செயற்பாடு 'விளையாட்டு வீடு' எனும் தலைப்பில் காணப்படுகின்றது. இதன் குறிக்கோளாக 'பாடசாலை என்பது நண்பர்களுடன் விளையாடி மகிழ்ச்சியாகச் செயல்படக்கூடிய ஓர் இடம் எனும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வார்' என்பதாகும்.

இவ் அலகுக்கான வளங்களாக பின்வருவனவற்றைக் கொண்டு விளையாட்டு வீட்டினை செயற்படுத்தலாம். அதாவது,

1)நீரைக் கொண்ட பாத்திரம், தகரப்பேணி, பிளாத்திக்கோப்பை, பிளாத்திக் போத்தல், புனல், கரண்டி,வெற்று யோக்கட் கோப்பை போன்றன

2) சிறிய பாவைகள், பழைய உடைகள், வெற்று பவுடர்பேணி, பை, சிறிய தலையணை, பெட்டி, தொப்பி, சிறிய மரக்குற்றி, சிறிய சட்டிகள், சிரட்டைகள், மணல், பல்வேறு விளையாட்டுப் பொருட்கள், சீலையால் அமைத்த தொட்டி போன்றன..

3) பதப்படுத்தப்பட்ட களிமண், பலகைத்துண்டுகள், பொலித்தீன்தாள், மா உருண்டைகள், ஈர்க்குகள் போன்றன..

4) மரக்குற்றி, மரச்சில்லுகள், பிளாத்திக் பந்துகள், போத்தல் மூடிகள், பற்பசை மூடிகள், டீன்ஸ் குற்றிகள் போன்றவைகள்..

5) மண், சிரட்டைகள், பூக்கள், ஈர்க்குகள், பலாவிலைகள், மணல் நிரப்பட்ட தகரப்பேணி போன்றன..

பாடசாலையில் போதியளவு இடத்தில் விளையாட்டு வீடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும். அந்தவீடுகளுக்கேற்றாப்போல் மேலுள்ள பொருள்களை வைத்து விளையாடுவதற்கு ஆசிரியர் வழிப்படுத்தி உதவுதல் வேண்டும். மாணவர்களும் தங்களுடைய வீடுகள் போல நினைத்து அவர்கள் விளையாடுவார்கள்.

 இவ்வாறு வீடுகளை அமைத்ததும் ஆசிரியரத் மாணவர்களை அழைத்து வீடுகளையும், அங்குள்ள பொருட்களையும் அவதானிக்கச் செய்து அவர்களை சுதந்திரமான முறையில் விரும்பியவாறு விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். இவ்வாறு மாணவர்கள் விளையாடுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் பேசுகின்ற விதம், அவர்களது செயற்பாடுகள், அவர்கள் வெளிக்காட்டும் திறன்கள், ஒற்றுமை, பொருட்களை பகிர்ந்து கொள்ளல், தன்னுடைய வகிபாகம், வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விதம், உணவு தயாரித்தல், வீட்டை அலங்கரித்தல், பாவைகளைக் கொண்டு தலாட்டுப்பாடுதல், பொருட்கள், மற்றும் திரவங்கள் பற்றிய அளவு தொடர்பாக அவர்கள் செலுத்தும் அவதானங்கள் போன்ற பல்வேறு நடைத்தைக் கோலங்களை இதன் ஊடாக அறிந்து கொள்ள உதவுகின்றது.

இவ்வாறு விளையாட்டு வீட்டில் மாணவர்கள் இருக்கின்றபோதே அவர்களை இனங்காண்கின்ற உள்ளார்ந்த ஆற்றல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். உதாரணமாக நண்பர்களுடன் நெருக்கமாக அளவளாவுவார், வழங்கப்பட்டுள்ள பொருட்களை உரியவாறு கையாண்டு ஆக்கங்களை மேற்கொள்வார், நண்பர்களுடன் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்துவார் போன்ற ஆற்றல்கள் வெளிக்கொணரப்படுகின்றது. 

இத்தகைய செயற்பாடுகள் தரம் ஒன்றில் பாடசாலைக் கலைத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்பறைக் கற்றலுக்கு ஆரம்பப் படியாக அமைகின்றது. முன்பள்ளி விருத்தி மையங்களில் மாணவர்கள் சிறந்த முறையில் கையாளப்படுவார்களாக இருந்தால் இத்தகைய செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வார்கள். சில முன்பள்ளி நிலையங்களில் ஆங்கிலத்தில் உச்சரிப்புக்களை வழங்கி தமிழ்மொழியில் அவற்றுக்கான உச்சரிப்புக்களை வழங்காமல் விடுகின்றனர்.

 ஆனால் வகுப்பறையில் தமிழில் உச்சரிப்புக்களை கூறுகின்றபோது அதன் கருத்துத் தெரியாமல் இருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதன் காரணமாகவும் சில மாணவர்களுக்கு முன்பள்ளிப்பயிற்சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.

(அடுத்தவாரம் தொடரும்..)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :