21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கும்?ஆர்.சனத்-
பிறந்தநாளன்று '21' ஐ கையிலெடுக்கிறார் ஜனாதிபதி!
மொட்டு கட்சியின் இணக்கத்தை பெற அவசர சந்திப்பு
அமைச்சரவையும் இன்று '21' இற்கு ஒப்புதல் வழங்கும்

ரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று (20) அனுமதி வழங்கவுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று (20) மாலை நடைபெறவுள்ளது.
இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இழுபறி நிலையில் உள்ள சரத்துகள் தொடர்பில் இதன்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு, சட்டமூலத்துக்கு மொட்டு கட்சியின் இணக்கப்பாடு பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு அவசியம். எனினும், 21 இல் உள்ள சில சரத்துகளுக்கு அக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையிலேயே சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், கட்சிகளின் ஆலோசனைகளை, திருத்தங்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு, இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் திருத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. உள்ளடக்கங்கள் தொடர்பில் கலந்துரையாட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே இது விடயம் சம்பந்தமாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிப்பதற்கும், நாடாளுமன்ற அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்குவதற்கும் 21 இல் இடமளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அமைச்சரவை அனுமதியின் பின்னர், சட்டமா அதிபரின் சான்றுரை கிடைக்கப்பெற்ற பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்போதே உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெறக்கூடியதாக இருக்கும்.
வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனை சவாலுக்குட்படுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இக்காலப்பகுதியில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
உயர்நீதிமன்றத்தில் சட்ட விளக்கம், யோசனைகள் என்பன மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு, சட்டம் இயற்றும் பணி இடம்பெறும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 73 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :