பைதுஸ் ஸகாத் நிதியத்தினை வலுப்படுத்தி, பிராந்தியத்தை முன்னேற்ற ஒன்றுபட அறைகூவல் விடுத்தார் நிதியத்தின் தலைவர் முபாறக்



பிராந்தியத்தின் அபிவிருத்தி, சமூக முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் ஸகாத் நிதியத்தின் முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவை நம் ஊரின் வளர்ச்சிக்கான அடிப்படை தூண்கள் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவரும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கயாள்ளர்சபைத் தலைவரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தெரிவித்தார்.

நிதியத்தின் செயலாளர் யூ.எள்.எம். ஜௌபரின் வழிகாட்டலில் 2025.11.19 ஆம் திகதி, பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பைத்துஸ் ஸகாத் தொடர்பான விஷேட ஒன்றுகூடலின்போது நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில் மேற்படி கருத்துக்களை முபாறக் முன்வைத்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் வழக்கமான நிதி செயல்பாடுகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான விரிவான துறைசார்ந்த பலரையும் இணைத்துக்கொண்டு அவர்களது கருத்துக்கள் மற்றும் வழிகாட்டல்களை உள்வாங்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

மிகவும் உணர்வுபூர்வமாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்த தொழிலதிபர் முபாறக், அல்லாஹ்வின் அருளால் சிலருக்கே சமூக நலத்திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதாகவும், அது ஒரு மரியாதையான பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

“ஊருக்காக சிந்திக்கவும், முடிவெடுக்கவும், மக்களின் நிலையை புரிந்து உதவிக்கரம் நீட்டவும் அல்லாஹ் எவருக்கு வாய்ப்பு தருகிறாரோ, அவர் மீது பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பைதுல் ஸகாத் செயல்பாடுகள் – கண்ணுக்கு தெரியாத பெரிய உழைப்பு என்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பைத்துஸ் ஸகாத் நிதிய அலுவலகம் சிறிய அலுவலகமாகத் தோன்றினாலும் பைதுல் ஸகாத் நிதியத்தின் பின்னால் நடைபெறும் பணிச்சுமை மிகப்பெரியது என அவர் விரிவாக விளக்கினார்.

இங்கு மாதத்தில் 17–18 நாட்கள் நிலையான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தினமும் காலை 5.30 முதல் 9.00 மணி வரை மக்கள் சந்திப்பு மற்றும் வீடு தோறும் சென்று ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வருமான நிலை, குடும்ப உறுப்பினர், சுகாதார நிலை போன்றவற்றின் பின்னணிச் சரிபார்ப்பு, கணக்குகள், ஆவணங்கள் தயாரித்தல்,பயனாளி பட்டியல் இறுதி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இது “சிலருக்கு இது சிறிய வேலைபோல் தோன்றலாம்; ஆனால் உண்மையில் இது மிகப் பெரிய பொறுப்பு,” என்று அவர் தெரிவித்தார்.

ஜம்இய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவர் மௌலவி அஷ்ஷேக் எம்.எம்.எம்.சலீம் சர்க்கி, மௌலவி ஐ.எல்.எம்.ரஃபி (ஹிழ்ரி) மற்றும் மௌலவி, நப்றாஸ் உள்ளிட்ட உலமாக்களின் இடையறாத ஆலோசனையும் வழிகாட்டலும், இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் திடீர் சவால்கள் பற்றி தெரிவித்த முபாறக், பலர் எளிதாக ஒத்துழைத்தாலும், சில சமயங்களில் சிலர் வீட்டை திருப்பிக் காண்பிக்க மறுப்பது, பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்லாமல் தவிர்ப்பது, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, குடும்பத்தில் நிதி நிலையை மறைத்து சொல்லுதல் போன்ற சிக்கல்களும் எதிர்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். “எல்லோரும் திறந்த மனதோடும் நேர்மையோடும் நடந்தால், உதவி மிகவும் சரியானவர்களுக்குச் செல்லும்,” என்றும் தெரு பிரிவு, மஹல்லா மோதல், மஸ்ஜிது குழு பிரிவு “நாங்களும்–நீங்களும்” என்ற பார்வை இந்த மனப்பான்மைகள் ஊர் ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்து எனவும் அல் ஹாஜ் முபாறக் சுட்டிக்காட்டினார்.

“நம் ஊர் பாகிஸ்தான்–இந்தியா எல்லைப்பகுதி அல்ல; நாம் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மை நம் எதிர்காலத்தையே அழிக்கும்,” என்று எச்சரித்தார்.

சிலர் பதவிகளைப் பெற்றுவிட்டால் பொறுப்புகளை தவிர்த்து, பணி செய்யும் ஆட்களின் முன்னேற்றத்தையும் தடுக்க முயல்வது போன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“உதவ விருப்பமில்லையெனில், செய்கிறவர்களைத் தடுக்காது குறைந்தது நடுவில் நின்று விடாதீர்கள். செய்பவர்களுக்கு வழிவிட்டு விடுங்கள்,” என்று அவர் மக்களை விழிப்புணர்த்தினார்.

ஒற்றுமையுடன் செயல்பட்டால் பைதுல் ஸகாத் நிதியின் வலிமை பல மடங்கு உயரும் என அவர் எடுத்துரைத்தார்.

• நெல் சேகரிப்பு 100 மூடையிலிருந்து 2000 மூடையாக உயர வாய்ப்பு

• உதவி பெறும் குடும்பங்கள் பல மடங்கு அதிகரிக்கும்

• வறுமை குறையும்

• சமூக நிலை உயர்வு பெறும்

• கல்வி மற்றும் தொழில் பயிற்சி திட்டங்கள் விரிவடையும்


“ஒற்றுமை என்பது நம் ஊரின் மிகப் பெரிய ஆயுதம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பைதுல் ஸகாத் மற்றும் மஸ்ஜிது நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முக்கிய முயற்சிகள்:

• தொழிற்பயிற்சி நிலையங்கள்

• பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பாடநெறிகள்

• மாதாந்திர ஆதரவு திட்டம்

• குடிநீர், வீடு திருத்தம் போன்ற சமூக அடிப்படை வசதிகள்

• மத மற்றும் ஒழுக்கக் கல்வி நிகழ்ச்சிகள்

• வறுமைக் குடும்பங்களின் கணக்கெடுப்பு மற்றும் தரவுத்தளம் அமைத்தல்


இந்த திட்டங்கள் அனைத்தும் சமூகத்தின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். “எல்லை போடாதீர்கள்… ஊரை ஒரு குடும்பமாகப் பாருங்கள்.

மஸ்ஜிதிற்கும் பைதுல் ஸகாதிற்கும் சக்தியாக இருங்கள்.

உண்மை, ஒழுக்கம், தொழுகை – இவை மட்டுமே சமுதாயத்தை நேர்மையான பாதைக்கு அழைக்கும்.” என்றும் பிரிவினையை விட்டு ஒன்றுபடுங்கள் என்றும் அறைகூவல் விடுத்தார்.

நிகழ்வின்போது உலமாக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வட்டை விதானைமார் போன்றோர் நிதியத்தை வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு காத்திரமான கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்வில் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், சமூகத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் என பலரம கலந்துகொண்டனர்.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :