கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, குறித்த வைரஸ் இலங்கையில் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் பல காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்
" கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, குறித்த வைரஸ் இலங்கையில் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் பல காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் பொது மக்களும் விழிப்பாகவே இருத்தல் அவசியம்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (21.03.2020) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
" சீனாவில் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸானது உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளதுடன், பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது.
இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு 2 இலட்சத்து 76 ஆயிரத்து 665 பேரில் 11 ஆயிரத்து 419 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 91 ஆயிரத்து 954 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டகையோடு, நாட்டை முடக்கி காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் வைரஸ் தொற்று பரவுவதை தடுத்திருக்கலாம்.
ஆனால், இரண்டு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அரசாங்கம் வேகமாக செயற்பட ஆரம்பித்தது. அதற்குள் 72 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது. மேலும் பலருக்கு பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம். சுகாதார பிரிவினருக்கும், படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஆனால், இதனைவிடவும் வேகமாக அரசாங்கம் செயற்படவேண்டியுள்ளது.
வைரஸ் தாக்கத்தின் எதிரொலி 60 நாட்கள்வரை இருக்குமென மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, ஊடரங்குச்சட்டம்போட்டு, அதனை தளர்த்துவதன் ஊடாக மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. அரசினதும், அதன் நிர்வாக இயந்திரங்களினதும் கழுகுப்பார்வை தொடரவேண்டும்.
ஆனால், இந்த அரசாங்கத்தின் இயலாமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக நிலைவரத்தை கருதும்போது எதிர்காலத்தில் உணவுத்தட்டுப்பாடுகூட வரலாம். தனிமைப்படுத்தும் கால எல்லையை நீடிக்கவேண்டிவரலாம். எனவே, இந்த சவால்களுக்கு எப்படி முகங்கொடுப்பது என்பது தொடர்பான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவேண்டும். அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
அதேவேளை, நாட்டு மக்களும் விழிப்பாக இருக்கவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். தனிமைப்படுத்தல் காலத்தை விடுமுறையாககருதி களியாட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கை காலப்பகுதியாக கருதி கவனமாக இருங்கள்." - என்றுள்ளது.