கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவது தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும்


எம்.ஜே.எம்.சஜீத்-
பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவது தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும்

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்துடன் கிழக்கு தமிழர்கள் இணைந்து கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் அன்மையில் வெளியிட்ட அறிக்கையானது இன ஐக்கியத்திற்கும், சமாதானத்திற்கும், பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதகமான ;விளைவுகளை ஏற்படுத்தப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன்; வெளியிட்ட அறிக்கை தொடர்பில் (20) பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்…
30 வருட கால கொடூர யுத்தத்தினால் வட கிழக்கில் பாதிக்கப்பட்டிருந்த இன ஒற்றுமையினை தற்போதைய சமாதான சூழ்நிலையில் கிழக்கில் படிப்படியாக் அர்ப்பணிப்போடு வளர்த்துவரும் இம்முக்கிய கால கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாகவே முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய உறவை சீர்குழைப்பதற்கான முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது..
கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி இனவாதத்தினை பரப்புவதனால் எதிர்வருகின்ற தேர்தல்களில் தமிழ் மக்கள்; வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சில தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவதற்கும் தமிழ் மக்கள் அவர்களால் ஏவிவிடப்படுகின்றனர். இது மிகவும் கவலையான விடயமாகும்.

பூர்வீகமான முறையில் வட கிழக்கில் வாழும் நாம் நமது சமூகங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சினைகள் வரும் போது பேச்சு வார்த்தைகள் மூலம் இவைகளை தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும். வாய்ப் பேச்சளவில் முஸ்லிம் மக்கள் எங்களின் சகோதரர்கள், சகோதர இனம் அவர்கள் எங்களுடன் இணைந்துதான் அரசியல் பயனங்களை மேற்கொள்ள வேண்டும் என பேச்சளவில் கூறுவோர் தற்போது இனவாத கருத்துக்களை கக்குவது குறித்து கவலையடைய வேண்டியுள்ளது.
30 வருட கால கொடூர யுத்த சூழ்நிலையில் வாழ்ந்த சமூகங்களுக்கிடையில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுகின்றது. அப்பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அனுகி இரு சமூகப் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தையூடாக தீர்ப்பதற்கு அரசியல் தலைவர்கள் முயல வேண்டும். மாறாக மீண்டும் இனவாதத்தினை விதைப்பதன் ஊடாக நிலையான சமாதானத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென தமிழ் மக்கள்; ஆயுதமேந்தி போராடினார்கள். அதிகாரத்தினை கேட்டு போராடிய தமிழ் மக்கள் தங்களின் ஆயுதங்களை வட கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை நோக்கி திருப்பினர். இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் தலைவர்களுடன் இணைந்து சாத்வீக அரசியல் போராட்டத்திற்கு பாரிய பங்கினை வழங்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து தமிழ் தலைவர்களின் சாத்வீக போராட்ட அரசியலிருந்து ஒதுங்கினர்.
அதன் பின்னர் முஸ்லிம் தலைமைகளுக்கு தமது சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுடன் வட கிழக்கில் வரலாற்று ரீதியாக இன உறவுடன் வாழ்ந்து வந்த தமிழ் - முஸ்லிம் உறவுகள் பாதிப்படைந்தன.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களில் ஒன்றாக முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் ஆயுதங்களை திருப்பியது என்பதனை எல்லோரும் இன்று யதார்த்தமாக ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் திருகோணமலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துகின்றனர்,
அதே போன்று வட மாகாணத்தில் முஸ்லிம்கள் மாடு அறுக்க கூடாது என தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே போன்று மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களையும் தமிழ் மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். இந்த செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்களினது அங்கீகாரத்துடன் இடம்பெறுவதாக முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வட கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்வாதி இருந்து செயல்படுவதனை பார்க்கின்றோம். நமது நாட்டில் அரசியல் வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது இனவாதத்தினை உருவாக்கி இந்த நாட்டில் அரசியல் செய்து இரத்த ஆறு ஓடுவதற்கு காரணமாக இருந்தவர்கள் இனவாதத்தினால் அழிந்தே போயுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -