அதிக வாக்குகளை கிழக்கில் கொண்ட முஸ்லிம் காங்கிரசின் தலைவராக கிழக்கை சேராத ஒருவர் இருப்பதால் அவரால் கிழக்குக்கும் சேவை செய்ய முடியவில்லை தெற்கு முஸ்லிம்களுக்கும் செய்ய முடியவில்லை.
அதே போல் கொழும்பு முஸ்லிம்கள் தமக்கென தனித்துவ கட்சியொன்றை இது வரை பலப்படுத்தமும் இல்லை. காலாகாலமாக பேரின கட்சிகளில் ஒட்டியிருந்து ஏதாவது சில்லறை கிடைத்தால் போதும் என இருப்பதை காண்கிறோம். இதன் காரணமாக அரசாங்கத்திடம் தமது வாக்குப்பலத்தை காட்டி உரிமைகளைப்பெற முடியாட்க நிலையில் உள்ளனர்.
ஒரு காலத்தில் முஜிபுர்ரஹ்மான் தனியான முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்தார். ஆனாலும் அவரை கொழும்பு முஸ்லிம்கள் நிராகரித்தனர். ஆனால் அவர் ஐ தே கவில் இணைந்து போட்டியிட்ட போது அவரை வெல்ல வைத்தனர். ஏன் கொழும்பு முஸ்லிம்கள் இத்தகைய சிந்தனையில் இருக்கின்றனர் என்பது புரியவில்லை.
கொழும்பு வாழ் தமிழ் மக்களும் மிகப்பெரும்பான்மையாக ஐ தே க ஆதரவாளர்கள்தான். இருந்தும் மனோ கணேசனின் தனிக்கட்சியையும் பலப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மனோவினால் பல விசயங்களை சுயமாக சாதிக்க முடிகிறது.
எவ்வாறு இந்த நாட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் வடக்கு கிழக்குக்கு வேறாகவும் மலையகம் கொழும்புக்கு வேறாகவும் இருக்கிறதோ அவ்வாறே முஸ்லிம்களின் பிரச்சினைகளும் இருந்தும் இவற்றை எவ்வாறு வேறாக கையாள்வது என்ற அரசியல் சிந்தனைத்தெளிவு முஸ்லிம் மக்களிடம் இல்லை.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் வித்தியாசமானவை. இங்கு தமிழ் பேரினவாதத்தால் அதிகமாகவும் சிங்கள பேரினவாதத்தால் கொஞ்சமாகவும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கொழும்பு, தெற்கு முஸ்லிம்கள் முழுக்க முழுக்க சிங்கள பேரினவாதத்துக்கே முகம் கொடுக்கின்றனர்.
ஆகவே நாம் எவ்வளவு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கட்சி என்ற வார்த்தை அலங்காரங்களை முன் வைத்தாலும் யதார்த்தம் வேறாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவர் அஷ்ரப் கிழக்கு மக்கள் வாக்குப்பலத்தால் அதிகாரம் பெற்ற பின் தான் தேசியத்துக்கும் தலைவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கடைசியில் எவரது உரிமையையும் பெற்றுக்கொடுக்க முடியாத அளவு பிஸியானதுடன் அவரை நம்பிய கிழக்கு மக்களும் குறிப்பாக அவரது ஊரான கல்முனை மக்களும் அவரது சேவையை இழந்தனர் என்பதையும் நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பதவியை ரவூப் ஹக்கீம் கிழக்குக்கு வழங்கி விட்டு கண்டி, கொழும்பு போன்ற முஸ்லிம்களுக்கென தனியான கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
உலமா கட்சி