எம்.ரீ. ஹைதர் அலி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை எவ்வாறாயினும் பிளவுபடுத்தி அதனை இல்லாமல் செய்கின்ற விடயங்கள் கடந்தகால ஆட்சியில் மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கரஸினூடாக இடம்பெறக்கூடிய அபிவிருத்திகள் தடுத்து நிறுத்தப்பட்டு கட்சியினூடாக பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு 2016ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து காவத்தமுனை சனசமூக நிலைய வாசிகசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் மற்றும் வாசிகசாலைக்கு தேவையான புத்தகங்கள் என்பன கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் 2017.03.11ஆந்திகதி-சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்... கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் எங்களினுடைய உயிர்களை கூட துச்சமாக மதித்து இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று ஏற்படுவதற்கு பங்காளிகளாக இருந்தோம்.
இந்த நல்லாட்சியில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட இந்த ஆட்சியில் எமது சமூகத்திற்கான உரிமைகளை எவ்வாறாயினும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். வெறுமெனே பத்திரிக்கைகளில் அறிக்கை விடுவதும், வலைத்தளங்களை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமான அரசியல் கலாச்சாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. மாறாக இந்த சமூகத்தினுடைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பதில் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் மிகவும் நுட்பமான முறைகளில் பல்வேறு விடயங்களை எமது கட்சி முன்னெடுத்து வருகின்றது.
முஸ்லிம் மக்களின் ஒரு பெரும் சக்தியாக இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருப்பதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் எவ்வாறாயினும் இக்கட்சியினை அழிக்க வேண்டும் என்று செயற்பட்டுக் கொண்டிருகின்றார்கள். இத்தகையவர்கள் கட்சியினை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகண்ட பிறகு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையினை விமர்சித்து அதன் மூலமாக இக்கட்சியினை அழிக்க முடியும் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களது கனவுகள் ஒரு நாளும் நிறைவேறப்போவதும் கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமையினை வென்றெடுப்பதற்காக ஒரு இலட்சியத்தோடு உருவாக்கப்பட்ட கட்சி ஆகும். மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்தக் கட்சிக்காக தனது உதிரத்தினை உரமாக இட்டு வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இன்று எமது சமூகத்தின் உரிமை குரலாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசினை எவராலும் ஒரு போதும் அழித்துவிட முடியாது.
பெரும்பான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பேரினவாத கட்சிகளுக்கு மத்தியில் முஸ்லிம்களை பிரதிநித்தித்துவப்படுத்தும் ஒரே ஒரு கட்சியான இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காட்சியினை அழித்து எமது சமூகத்தை பெரும்பான்மை கட்சிகளிடத்தில் கையேந்தி நிற்கின்ற ஒரு அரசியல் அனாதையாக மாற்ற ஒரு போதும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். என தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களும்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், அவர்களும் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம். இஸ்மாயில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. மீராசாஹிப், எஸ்.ஏ. அன்வர் மற்றும் எம்.எம். அஹமட்லெப்பை, கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.