சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் 2025.06.09 ஆம் திகதி சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே யஹ்யாகான் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராக நீண்ட காலமாக செயற்ப்பட்டு வந்த தான், அந்தக்கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தின் செயற்ப்பாடுகளில் அதிருப்தியடைந்த நிலையிலேயே ஒதுங்கி ஐக்கிய மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் றவூப் ஹக்கீமிடம் இருக்கும்வரை அந்தக்கட்சியின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதையும் அடைந்துகொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவரது தலைமைத்துவத்தின்கீழ் முஸ்லிம் காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளதாகவும் மர்ஹும் அஷ்ரபின் கொள்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேறுவது என்றால் அஷ்ரபைப் போல கல்முனையைத் தளமாகக்கொண்ட ஒருவரிடம் கட்சியின் தலைமைத்துவம் சென்றால் மட்டுமே அஷ்ரபின் கனவுகள் ஓரளவாவது நிறைவேறும் என்றும் யஹ்யாகான் தெரிவித்தார்.
தற்போதைய தலைவருக்கு கல்முனையப் பற்றியோ அல்லது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் தேவைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லை என்று தெரிவித்த அவர், ஹக்கீமுடன் தொடர்புகொள்வதென்றால் இங்குள்ள அவரது அல்லாக்கை ஒருவரின் ஊடாகவே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியநிலை கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உயர்பீட உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அப்படியானால் சாதாரண தொண்டர்களின் நிலையை யூகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் தெரிவித்தார்.
தேசிய ரீதியில் தமிழ் மக்களது பிரதிநிதிகள் ஒற்றுமைப்படுவது தொடர்பில் பேசிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் சார்பான கட்சிகள் இணைவதென்றால் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் உள்ள கட்சியைத் தவிர்த்தே ஏனைய கட்சிகளை ஒன்றுபடவேண்டும் என்பதையே தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை தொடர்பான வழக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு ஒன்றை ஈட்டும் பட்சத்தில் தனது கட்சியான ஐக்கிய மக்கள் காங்கிரஸ், கல்முனை மாநகரசபை தேர்தலிலும் சாய்ந்தமருது நகரசபை தேர்தலிலும் களமிறங்கும் என்றும் ஹக்கீம் தலைமைத்துவத்திலான கட்சியைத் தோக்கடிக்க எந்தக்கட்சியுடனும் கைகோர்க்க தயாராவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்களுக்கு துரோகம் இளைத்துள்ளதாகவும் அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் துணைபோனதாகவும் தெரிவித்தார்.
ஹக்கீமுக்கு முஸ்லிம் சமூகம் பற்றிக் கவலை ஏதுமில்லை என்றும் தேவைப்பட்டால் தமிழ் கூட்டமைப்புடன் கூட இணைந்து செயற்படுவார் என்றும் தெரிவித்தார்.
நாங்கள் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தற்போதுள்ள அரசுக்கு சார்பான கருத்துக்களை ஆதரித்துச் செல்வதே சிறந்தது என தெரிவித்த யஹ்யாகான், அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சிசபை தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அரசுக்கு ஆதரவினை வழங்குவதனூடாக பிராந்தியத்தின் அபிவிருத்திகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
ஹக்கீம் அண்மைக்காலமாக எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தொடர்பில் வெளியிட்டு வரும் கருத்துக்களை மறுதலிப்பதாகவும் முதிர்ந்த ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும் றவூப் ஹக்கீம் கீழ்த்தரமாக கருத்துக்களை கூறிவருவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த யஹ்யாகான், அஷ்ரபுடைய காலகட்டத்தில் அவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார் துறைமுகத்தில் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வழங்கினார். தேர்தல்முறைமையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார் இதுபோன்ற எத்தனையோ விடயங்களைச் சாதித்துக் காட்டினார். ஹக்கீம் என்ன செய்துள்ளார் என்று கேள்வியெழுப்பினார்.
இவற்றுக்கெல்லாம் ஒரேவழி ஹக்கீம் பதவிவிலகி; ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment