றிஸான்,பர்சான்.ஏ.ஆர்-
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாபா பரீதா அப்துல் றாசீக் கலாபூஷணம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வழங்கப்படும் இவ் விருதின் 2015ம் ஆண்டுக்கான இலக்கியம் மற்றும் நாடகத்திற்காக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்இ வட இலங்கை சங்கீத சபாவின் தேர்வில் அதிசிறப்புப் பிரிவில் தெரிவாகி தென்னிந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் பிரிவில் 1972ம் ஆண்டு தனது 'சங்கீத பூஷணம்' எனும் பட்டப் படிப்பையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிபளோமாவையும் பூர்த்தி செய்தவர்.
ஆசிரியர் சேவையில் பத்து வருடங்கள் சங்கீத பட்டதாரி ஆசிரியராகச் சேவையாற்றிய சமகாலத்திலே அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் தொலைக்கல்வி நிலையத்தில் போதனாசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.
பின்இ அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் முதல் விரிவுரையாளர் குழாமில் நியமிக்கப்பட்டு அழகியல் கல்வியின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடந்த இருபது வருடங்கள் பணியாற்றி 2011ம் ஆண்டு ஓய்வு நிலைக்குச் சென்றுள்ளார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மிகக் குறுகிய வளங்களுடன் ஆரம்பிக்கப்ட்ட போது அதன் நிர்வகிப்பிலும் வளர்ச்சியிலும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பாடுபட்டு இன்று அக்கல்லூரி தலை நிமிர்ந்து நிற்பதற்கு இவரும் துணை நின்றவர்களில் ஒருவர். குறிப்பாக பெண் பயிலுனர்களின் பொறுப்பு விரிவுரையாளராக ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டாரியல், நாடகம், வாய்ப்பாட்டு என்பவற்றில் சிறப்பு பெற்றிருந்த திருமதி பரீதா அப்துல் றாசீக் இவை தொடர்பான பல ஆய்வுகளில் ஈடுபட்டதோடு இன்றைய தலை முறைக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிற்கு இவற்றினை பயிற்றுவித்துள்ளார். குறிப்பாக, ஆரம்ப பாடத்திட்டத்தில் அழகியலினூடாய் கற்பிக்கும் வழிமுறைகளில் இவர் அதிக ஈடுபாட்டுடன் உழைத்தார்.
அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் பெண் உறுப்பினராகவும் சமாதான நீதவானாகவும் சேவை செய்ததோடு பல்வேறு சமூக நிறுவனங்களினூடாய் மக்கள் பணிகளில் ஆர்வம் கொண்டு இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இலக்கியம், ஓவியம், நாடகம், கிராமியக் கலைகள், நாட்டாரியல், இசை, மொழிபெயர்ப்பு, மற்றும் ஊடகத்துறை என்பனவற்றில் தடம் பதித்தவர்களிற்காய் இலங்கை அரசினால் வழங்கப்படும் அதிஉயர் கௌரவ விருதாக 'கலாபூஷணம்' காணப்படுகின்றது.