கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளோம். கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இலங்கையை பாதுகாத்து கொள்வதற்காக சர்வதேச சுகாதார சட்டத்துக்கு அமைவாகவும் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தினது ஆலோசனைக்கமையவும் சுகாதார அமைச்சு செயற்படுகிறது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இலங்கையை பாதுகாக்க சர்வதேச சுகாதார நியதிகளுக்கு அமைவாகவும் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தினது ஆலோசனைக்கமையவும் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகின்றது. இதன்போது விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் , பயணிகளின் உடல் வெப்பத்தை அறிந்துக் கொள்ள ஸ்கேன் இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடல் வெப்பநிலைக் குறித்து கவனம் செலுத்திய பின் அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக தொற்று நோய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கிசிச்சையளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் போது வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளியின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்குதலுக்குள்ளாக்கியதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டால் அவரை தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பிரத்தியோக பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிலே ஜனாதிபதி செயலகம் , வைத்திய சங்கம் , மேல்மாகாண ஆளுனர், குடியகல்வு குடிவரவு திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலையம் , ராணுவ வைத்திய சங்கம் , ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த 17 உறுப்பினரை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று நோய் பிரிவின் வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய நோயைக் கட்டுப்படுத்த அனைத்துவிதமான செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் , சைனாவில் கல்விகற்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ் மாணவர்கள் நாடு திரும்புவதற்கான செலவுகளில் 50% அரசாங்கம் வழங்குகின்றது. இவ்வாறு வரும் மாணவரை தியத்தலாவை ராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று வைத்திய பரிசோதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதன்போது சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க குறிப்பிடுகையில்:-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது சைனாவிலிருந்து இலங்கை வருகின்ற விமானங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரேத்தியோக விமான தரிப்பிடத்தில் தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கும் பிரத்தியோக வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் விமானங்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வூட்ட வீடியோ காணொளி காட்சிப்படுத்தப்படுகிறது. துறைமுக பகுதியிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
பலாலி விமான நிலையத்திலும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் வேலை செய்பவர் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய வருபவர்கள் நகரங்களுக்கு செல்லாமல் இருப்பதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன. அங்கொட வைத்தியசாலையில் மாத்திரமே இவ் வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வைரஸ் தாக்கத்குள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு , பொலன்னறுவை , வாத்துவ பிரதேசத்திலிருந்தும் அங்கொட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக ஒருவர் வீதம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து வைத்தியசாலைக்கும் இவ்வரைஸ் தாக்குதல்கள் குறித்தும் , சிகிச்சை விபரங்கள் குறித்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நோய் தாக்கம் குறித்து சமூக வலை தளத்தில் உறுதிப்படுத்தப்படாத பல செய்திகள் பரப்பப்படுகின்றன. அரசாங்க சுகாதார அமைச்சையினால் வெளியிடப்படும் செய்தி தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் , மேலதிக தகவல்களுக்கு 0710107107 மற்றும் 0113071073 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
கேள்வி:- இலங்கையில் வேலைபுரியும் சைனா தொழிலாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?
பதில்:- இங்கு வேலை செய்யும் சைனர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் , புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தமது நாட்டுக்குச் சென்றவர்கள் வேலையின் நிமித்தம் இங்கு வருகின்றனர். இவ்வாறு வரும் போது விமான நிலையத்தில் விசேட பிரத்தியேக பிரிவில் வெளியேறும் இவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன் , உடல் வெப்பநிலை பரிசோதனையின் பின்னர் நோய் அறிகுறிகள் தெரிய வந்தால் உடனடியாக தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இவ்வாறு நோய்அறிகுறிகள் தெரியாதவிடத்து இவர்கள் வழமையாக தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டு இவர்கள் தொடர்பில் முழு விபரமும் எடுக்கப்பட்டு பின்னர் வைத்திய சங்கத்தினர் சென்று பரிசோதனைகளை எடுத்து வருவர்.
கேள்வி:- மாஸ்க் ( Mask ) தட்டுப்பாடு தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?
பதில்: அந்த விடயம் தொடர்பில் மாஸ்க் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் , இதற்கான மூலப் பொருளின் தட்டுபாட்டின் காரணமாகவே உடனடியாக உற்பத்தியை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. அதேவேளை அந்த மூலப் பொருட்களை சைனாவிலிருந்தே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது சைனாவிலிருந்து இறக்குமதி செய்வது என்பது அவதானமான விடயமாகும். இந்நிலையில் வேறு நாட்டிலிருந்து மூலப் பொருளை கொள்வனவு செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான கோரிக்கையை விடுத்துள்ளோம்.
பதில்: அந்த விடயம் தொடர்பில் மாஸ்க் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் , இதற்கான மூலப் பொருளின் தட்டுபாட்டின் காரணமாகவே உடனடியாக உற்பத்தியை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. அதேவேளை அந்த மூலப் பொருட்களை சைனாவிலிருந்தே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது சைனாவிலிருந்து இறக்குமதி செய்வது என்பது அவதானமான விடயமாகும். இந்நிலையில் வேறு நாட்டிலிருந்து மூலப் பொருளை கொள்வனவு செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான கோரிக்கையை விடுத்துள்ளோம்.