கனடாவைத் தளமாகக் கொண்ட Humanovi.org அமைப்பின் பிரதிநிதிகள் வளவாளர்களாக இணைந்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக புவியியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஐ.எல்.எம். ஸாஹிர் வரவேற்புரையாற்றினார். தனது உரையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “Inspired by Nature – Climate for Our Future” என்ற இவ்வாண்டு தொனிப்பொருள் இயற்கையின் ஆற்றலிலிருந்து ஊக்கமடைந்து எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான காலநிலையை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
இயற்கை மனித வாழ்வைத் தாங்கும் அடிப்படை சக்தியாக இருப்பதுடன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், காடுகள், ஈரநிலங்கள், கடல்கள் மற்றும் உயிரியல் பல்வகைமை போன்ற இயற்கை வளங்கள் காலநிலையை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமல்லாது மனித நலனையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கின்றன என்றார். உலகம் இன்று காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைமை இழப்பு, மாசுபாடு மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்ற முன்னெப்போதும் இல்லாத சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இவற்றைச் சமாளிப்பதற்கு தனிநபர்கள், சமூகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், புவியியல் துறை கல்வி, ஆய்வு மற்றும் சமூக ஈடுபாடு ஊடாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நிலைத்தன்மை மற்றும் காலநிலைத் தாங்குதிறன் தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய நிகழ்வு அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும், நிலையான எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும் எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலான கல்விசார் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் தனது விசேட உரையில், காலநிலை மாற்றம் இனி எதிர்கால அச்சுறுத்தல் அல்ல; மனிதகுலம் இன்று நேரடியாக எதிர்கொள்ளும் நிதர்சனமான சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்கள் அறிவைப் பகிரும் நிலையங்களாக மட்டுமன்றி, சமூக மாற்றத்தை உருவாக்கும் மையங்களாகவும் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாணவர்கள் பட்டப்படிப்பைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய மாற்றத்தின் முகவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது சர்வதேச ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்கக் கொள்கைகளால் மட்டும் சாத்தியமில்லை என்றும், தனிநபர் மட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களே பெரிய மாற்றங்களுக்கான அடித்தளமாக அமைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தண்ணீர், மின்சாரம் மற்றும் இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல், வீணாக்கத்தைக் குறைத்தல், தேவையற்ற நுகர்வுகளைத் தவிர்த்தல் போன்ற எளிய நடவடிக்கைகள் கூட நிலையான எதிர்காலத்திற்கான பங்களிப்புகளாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இயற்கை வளங்களை வெறுமனே சுரண்டப்பட வேண்டிய வளங்களாகப் பார்க்காமல், அடுத்த தலைமுறைகளுக்காக பாதுகாக்கப்பட வேண்டிய பொது பொறுப்பாகக் கருத வேண்டும் என்றார். மாணவர்கள் எதிர்காலத்தில் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சமூகத் தலைவர்களாக உருவாகும்போது, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை சமூகத்தில் பரப்பும் “நிலைத்தன்மைக்கான தூதுவர்களாக” விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் (கலாநிதி) எம்.எம். பாஸில் தனது உரையில், உலக சுற்றுச்சூழல் தினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான நாளாகும் எனக் குறிப்பிட்டார். “Inspired by Nature – Climate for Our Future” என்ற இவ்வாண்டின் தொனிப்பொருள், இயற்கையிடமிருந்து ஊக்கமடைந்து எதிர்கால சந்ததியினருக்கான நிலையான காலநிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
உலகின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, வறட்சி, காட்டுத்தீ, கடல் மட்ட உயர்வு மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்வு, உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக நலன்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது அரசாங்கங்கள் அல்லது சர்வதேச அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு தனிநபர், குடும்பம், கல்வி நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் (கலாநிதி) எம்.ஐ.எம். கலீல் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர்.
பேராசிரியர் (கலாநிதி) எம்.ஐ.எம். கலீல் தனது உரையில், காலநிலை மாற்றம் இனி எதிர்கால அச்சுறுத்தலாக இல்லாமல் தற்போதைய உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். உலக வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் தீவிர வெப்ப அலைகள் போன்ற நிகழ்வுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், காலநிலைத் தாங்குதிறன் (Climate Resilience) உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இயற்கை சார்ந்த தீர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தரவுகள், சமூக பங்கேற்பும் சமத்துவ நிர்வாகமும் ஆகிய மூன்று அடிப்படைத் தூண்களே காலநிலைத் தாங்குதிறனின் மையமாக இருப்பதாக அவர் விளக்கினார். கண்டல் தாவரங்கள், மீள் வனமயமாக்கல், ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற பசுமை உட்கட்டமைப்புகள் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகள் கார்பன் சேமிப்பு, உயிரினப் பன்மை பாதுகாப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், தொலை உணர்தல் (Remote Sensing), புவியியல் தகவல் அமைப்பு (GIS), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் காலநிலை அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றன எனக் குறிப்பிட்டார். சமூகங்களின் செயற்பாட்டுப் பங்களிப்பே காலநிலைத் தாங்குதிறனின் நீடித்த வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்ட இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த Integrated Institute of Disaster Management (IIDM) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரான கௌரவ கலாநிதி கே. வாசுதேவன், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களை எதிர்கொள்வதில் பேரிடர் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிலையான அபிவிருத்தி, சமூக அடிப்படையிலான பேரிடர் தயார்நிலை, இயற்கை வளங்களின் பொறுப்பான முகாமைத்துவம் மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கனடாவைச் சேர்ந்த Bernard Alonso, Humanitarian Approach towards Environmental Sustainability (சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மனிதாபிமான அணுகுமுறை) என்ற தலைப்பில் உரையாற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கையைப் பாதுகாப்பதற்கான முயற்சி மட்டுமல்லாமல், மனித நலன், சமூக ஒற்றுமை மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுடன் இணைந்த ஒரு செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுறவு அணுகுமுறைகள், சமூகங்களின் பங்களிப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை நிலையான சுற்றுச்சூழல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாதவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் பேராசிரியர் கலாநிதி டி. வசந்தகுமாரன், காலநிலை மாற்றத்தின் புவியியல் பரிமாணங்கள், சுற்றுச்சூழல் சவால்களின் பிராந்திய தாக்கங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதில் கல்வி மற்றும் ஆய்வுகளின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, அறிவியல் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வடிவமைப்பதன் அவசியத்தையும், இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிலையான சுற்றுச்சூழல் எதிர்காலத்தை உருவாக்குவதில் முன்னணிப் பங்காற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெசீல், கலை மற்றும் கலாசார பீடத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பொறியலாளர் எம்.எஸ்.எம். பசில், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ஆர்.எம். அஷ்ஹர், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நன்றியுரையை புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப் வழங்கியதுடன், உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.




0 comments :
Post a Comment