சம்மாந்துறை பிரதேச சபையின் தற்போதைய நிர்வாகம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (சி.ல.மு.கா) சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்மாந்துறையில் நேற்று (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“வரவு–செலவுத் திட்டத்தில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதுகூட உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியான பழிவாங்கல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மக்களுக்கு பயனளிக்கும் எந்தவொரு நிலையான அபிவிருத்தித் திட்டத்தையும் தற்போதைய நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக திண்மக்கழிவு முகாமைத்துவ சேவை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“2018 முதல் 2023 வரை நாங்கள் உறுப்பினர்களாக இருந்த காலத்தில் திண்மக்கழிவு சேவை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து பல பகுதிகளில் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஊரைச் சுத்தப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊரையே குப்பைக் காடாக மாற்றியுள்ளனர்” என அவர் குற்றம்சாட்டினார்.
அப்துல் மஜீத் மையவாடி, பலாஹ் மஸ்ஜித் மற்றும் அருகிலுள்ள பாடசாலை அமைந்துள்ள பகுதியில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதனால் மாணவர்கள், பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சபை அமர்வுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும், எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி யோசனைகள் நிதி இல்லை என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வீதிவிளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காணப்படுவதாகவும், நகர்ப்புறங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலையில் கிராமப்புற மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சம்மாந்துறை பொதுச் சந்தையின் நிர்வாகத்திலும் தற்போதைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மீன் வியாபாரிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும், சந்தை இன்னும் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றார்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கலந்து கொண்ட சம்மாந்துறை தவிசாளர், பிரதேசத்தின் பிரதான அபிவிருத்தித் தேவைகளை முன்வைக்கத் தவறியதாகவும் நளீம் விமர்சித்தார்.
“மற்ற உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தங்களது பிரதேசங்களின் முக்கிய தேவைகளை முன்வைத்தனர். ஆனால் சம்மாந்துறை சார்பில் ஊழியர்களின் சம்பளத்திற்கான நிதி மட்டுமே கோரப்பட்டது. மக்களின் சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் உரிய முறையில் எடுத்துரைக்கப்படவில்லை” என்றார்.
பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஜனநாயக நடைமுறைகளுக்கும் உள்ளூராட்சி சட்ட விதிகளுக்கும் அமைவாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இறுதியாக, தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் தற்போதைய நிர்வாகம் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய காங்கிரஸ் (தே.கா.) சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் அப்துல் காதர் முஹம்மது சஹீல் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான முஹம்மது காசிம் நெளஷா, அஹமட் ஐனுன் ரிபானா மற்றும் செய்யது முஹம்மது சித்தி நிலோபரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குற்றச்சாட்டுகளுக்கு தவிசாளர் மறுப்பு
இதேவேளை, சம்மாந்துறை பிரதேச சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு தொடர்புகொள்ளப்பட்டபோது, பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவை அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையான அடிப்படையும் காணப்படவில்லை என்றும், அவை அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கழிவகற்றல் சேவைகள் தொடர்பாக சபை எதிர்நோக்கும் சவால்களுக்கு பிரதான காரணம் போதுமான இயந்திர வசதிகள் இல்லாமையே எனத் தெரிவித்த அவர், தேவையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பெற்றுத்தருமாறு உள்ளூராட்சி அமைச்சிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களும் இதே பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சபைக்கு தேவையான வாகனங்களின் விபரங்கள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடமும் இவ்விடயம் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறிய அவர், 2026ஆம் ஆண்டின் இறுதியில் வாகனங்களுக்கான கேள்வி மனுக் கோரல் இடம்பெற்று, 2027ஆம் ஆண்டில்தான் புதிய வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
வாகனப் பற்றாக்குறை இருந்தபோதிலும் மாற்று வழிமுறைகள் மூலம் பொதுச் சேவைகளைத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை பிரதேச சபை 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கிய பரந்த நிர்வாகப் பரப்பைக் கொண்டிருப்பதால் சேவைகளை வழங்குவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
எனினும், மின்சார தெருவிளக்கு பராமரிப்பு, கழிவகற்றல், வடிகால் சுத்திகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொதுச் சேவைகள் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக சபை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment