பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதி அதிபர்களான தண்சீல், முபாறக் மற்றும் சாதாரண தரப் பகுதித் தலைவர் அஜ்மல் ஹூசைன் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் போது நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், தற்போதைய சந்தையில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டப் பணிகள், நுகர்வோர் முறைப்பாடுகளை கையாளும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான முஹம்மட் ஸாஜீத் ஸமான் மற்றும் ஏ.பி.எம். இர்பான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும், உயர்தரப் பிரிவு ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினரும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்களின் நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு தங்களது பூரண ஆதரவை வழங்கினர்.
மாணவர்களிடையே பொறுப்புணர்வுள்ள நுகர்வோர் பண்பாட்டை உருவாக்குவதற்கான முக்கியமான முயற்சியாக அமைந்த இந்நிகழ்வு, அவர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.









0 comments :
Post a Comment