கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2020 ஆம் வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் அதிபர் பர்ஸான் அவர்களது தலைமையில் நேற்றைய தினம் (28) பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
கமர், நஜ்ம், ஷம்ஸ் ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளின் இறுதியில் ஷம்ஸ் இல்லம் 454 புள்ளிகளைப் பெற்று 2020ம் வருடத்திற்கான சம்பியன் இல்லமாக தெரிவு செய்யப்பட்டது. 436 புள்ளிகளைப் பெற்ற நஜ்ம் இல்லம் இரண்டாவது இடத்தையும், 429 புள்ளிகளைப் பெற்ற கமர் இல்லம் மூன்றாவது இடத்தையும் தமதாக்கிக் கொண்டன.
நிகழ்வின் பிரதம அதிதியாக அரச முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் தவ்ஸீர், கோட்டக் கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பிராந்திய பாடசாலையின் அதிபர்கள், அத்தனகல்ல பிரதேச சபைத் தவிசாளர் பிரியந்த உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.
நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் அதிபர் உட்பட விளையாட்டுப் போட்டிகளுக்கான செயலாளர் ஆசிரியர் ரம்ஸான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவ மற்றும் மாணவிகள் சங்கம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் நலன்புரி சங்க உறுப்பினர்கள் தமது பங்களிப்பை சிறந்த முறையில் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.