தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் மூன்றாவது பேராளர் மாநாடு நாளை 4/11/2019 ஹட்டன் டீ.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழநி திகாம்பரம் தலைமையில் அரசியல் உயர்பீட கூட்டம் காலை 9:30 மணிக்கு தொழிலாளர் தேசிய சங்க தலைமை அகத்தில் இடம்பெறுவதோடு உயர்பீட உத்தியோகத்தர் சபை தெரிவுகளும் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து 10:30 க்கு நடைபெறும் பேராளர் மாநாட்டில் அதற்கான அங்கீகாரமும் மத்தியகுழு, நிர்வாக சபை, தேசிய சபை, வட்டார அமைப்பாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என கட்சியின் செயலாளர் நாயகமும் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு அமரர். வி.கே.வெள்ளையன் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் பி.பெருமாள், சி.வி.வேலுப்பிள்ளை போன்றவர்களும் அதில் இணைந்து பலமான மலையகத் தொழிற்சங்கமாக வளர்த்தெடுத்தனர். அவர்களின் காலத்தில் சுயாதீன குழுவாகவும் கூட்டணியாக பொது சின்னங்களிலும் தேர்தல்களில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கம் 90 களில் சங்கத்தின் தலைவர் தவசி அய்யாத்துரை தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் பல தேர்தல்களில் போட்டியிட்டது. மயில் சின்னத்தில் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டது. மத்திய மாகாண சபையில் தலைவர் தவசி அய்யாத்துரை, பொதுச் செயலாளர் பி.வி.கந்தையா ஆகியோரை உறுப்பினராகவும் கொண்டிருந்தது. அதேபோல பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. 1999 ம் ஆண்டு மலையகத்தில் உருவாக்கப்பட்ட “ இந்திய வம்சாவளி மக்கள் பேரணி” யின் உத்தியோகபூர்வ கட்சியாக மயில் சின்னத்தைக் கொண்டிருந்த தொழிலாளர் தேசிய சங்கமே தலைமை அமைப்பாக செயற்பட்டது. அந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மயில் சின்னத்தில் போட்டியிட்டே மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. அதோடு தொழிலாளர் தேசிய சங்கம் தனது தனித்துவ அரசியல் அடையாளத்தையும் கட்சியின் மயில் சின்னத்தையும் கூட இழக்க நேர்ந்தது. 2000 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இறுதியாக தொழிலாளர் தேசிய சங்கம் மயில் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு துரதிஷ்டவசமாக கட்சி கபடத்தனமாக கைமாற்றப்பட்டதுடன் மயில் சின்னத்தையும் இழந்தது.
எனினும் 2007 ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமத்துத்தை பொறுப்பேற்ற பழநி திகாம்பரம் சங்கத்தை மாத்திரமின்றி அரசியல் பிரிவையும் பலப்படுத்த தொடங்கினார் .அதன்படி புதிய அரசியல் கட்சியாக “ தொழிலாளர் தேசிய முன்னணி” 2009 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஸ்தாபக செயலாளராக மயில்வாகனம் திலகராஜா தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் படிப் படியாக தனது அரசியல் பயணத்தில் தனித்தும் கூட்டணியாகவும் தேர்தல்களில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய முன்னணி 2017 ஆம் ஆண்டு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதுடன்
“அரிவாள்” சின்னத்தை யும் பெற்றுக்கொண்டுள்ளது.
பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்களையும் தொழிலாளர்கள் அல்லாத மலையக சபூகத்தினரையும் பொது அரசியல் செல்நெறியில் உள்வாங்கி செயற்படும் வகையில் “ “அறிவால் வெல்லும் அரிவாள்” எனும் மகுட வாசகத்துடன் மலையகத்தின் பலமான அரசியல் சக்தாயாக வளர்ந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், நான்கு மாகாண சபை உறுப்பினர்கள் , ஒரு மாநகர சபை பிரதி மேயர், நாற்பத்தைந்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி என பன்முகத்தனமையுடன் இளமைத் துடிப்புடன் இயங்கும் அரசியல் கட்சியாக இயங்கி வருகிறது. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் சமவாய்ப்பினை வழங்கும் வகையில் வட்டார குழுக்களிலும் தேசிய சபையிலும், நிர்வாக சபையிலும், மத்திய குழுவிலும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தீர்மானம் நிறைவேற்றும் அரசியல் உயர்பீடத்திலும் மூன்று பெண் உறுப்பினர்கள் உபதலைவர் உள்ளிட்ட பதவிகளில் செயல்படுகின்றனர். தனது தனித்துவத்தை நிலை நிறுத்தியவாறே தமிழ் முற்போக்கு கூட்டணியின் மூன்று முக்கிய கட்சிகளில் ஒன்றாகவும் இணைந்து ஐக்கிய முன்னணியாக செயற்பட்டு வருகிறது.