இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி, முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்ஆலய வளாகப் பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பி. இன்று (24.09.2019) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பௌத்த மதமும் அதன் கோட்பாடுகளும் மற்றும் புத்த பெருமானின் தர்ம சிந்தனைகளும் உலக நீதிக்கு வழிகாட்டுகின்றன. மனித சமுகத்தையும் நல்வழிப்படுத்துகின்றன. இதன்காரணமாகவே ஏனைய மதத்தவர்களும் பௌத்த சமயத்தை மதித்து செயற்படுகின்றனர்.
ஆனால் ‘காவி’ உடை அணிந்து கொண்டு புத்தரின் பெயரில் ஒரு சில பௌத்த துறவிகள் அதர்ம வழியில் செயற்பட்டு ஏனைய மதத்தவர்களை அடக்கி ஆளவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். புத்த பெருமான் இருந்திருந்தால் இத்தகைய பேரினவாத பிக்குகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சம்பவங்களைக்கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பார். அந்தளவுக்கு சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுத்து – நீதிமன்ற கட்டளைகளையும் மதிக்காமல் அடாவடியில் ஈடுபட்டு நாட்டில் காட்டாட்சியை ஏற்படுத்த களம் அமைத்துவருகின்றனர்.
பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்வதற்கான முயற்சியை மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்திருந்தால் சிலவேளே விட்டுக்கொடுப்புகளைகூட சம்பந்தப்பட்ட தரப்புகள் செய்திருக்கலாம். ஆனால், சண்டித்தனம் காண்பித்து, மக்களை மிரட்டி பௌத்த மேலாதிக்கத்தை முல்லை மண்ணில் விதைக்க இனவாத பிக்குகள் முற்பட்டதாலேயே சட்டத்தின் பாதுகாப்பை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்படி ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்றும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரேயுள்ள இராணுவ முகாமுக்குப் பின்புறமாக, கடற்கரைப் பகுதியில் நீதிமன்றம் அடையாளப்படுத்தும் இடத்திலேயே சடலத்தை எரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் அதனை அப்பட்டமாகமீறும் வகையில் ஆலயத்துக்கு அருகேயுள்ள கேணி அமைந்துள்ள இடத்தில் பிக்குவின் உடலை எரிப்பதற்கு ஞானசார தேரர் தலைமையிலான பேரினவாத இனவாத கும்பல் நடவடிக்கை எடுத்திருந்தது. அதுமட்டுமல்ல சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தியுள்ளனர். பௌத்த பிக்குகளின் இந்த செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதுடன் சட்டத்தின் பிடிக்குள் இருந்தும் தப்பவேகூடாது. அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிப்போம்.
பௌத்த பிக்குகள் என்ற போர்வையில் சிலர் தொடர்ச்சியாக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை குழப்பி மத முறுகலை ஏற்படுத்த முயற்சித்துவருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டமும் தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக செயற்பட்டாலும் அரசியல் தலையீடுகள் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இதனால் சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற நீதிக்கோட்பாடும் மீறப்படுகின்றது.
குறிப்பாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். வெளியில் வந்த பின்னர் அவர் தற்போது என்ன செய்கின்றார்? மீண்டும் பழைய வழியிலேயே பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனவே, பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான அரச தலைவன் என்றால் பௌத்த தர்மத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இனியாவது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். பேரினவாதிகளுக்கு கடிவாளம் பூட்ட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையை மீண்டும் இருண்ட யுகம் சூழ்ந்துக்கொள்ளும் நிலைமையே உருவாகும்.
அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால், ஏனைய மதங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு மதத்தை ஆக்கிரமித்து - அழித்துதான் பௌத்த மதத்தை நிலைநாட்ட வேண்டும் என புத்தரும் கூறவில்லை. எனவே, இனவாத பிக்குகள் எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர். இதன் பின்னணி என்ன? இவர்களை இயக்கும் சக்திகள் எவை? என்பன கண்டறியப்படவேண்டும். '' என்றார்.