ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கடந்த ஒருவார காலமாக தலை நகரில் கழிவுப் பொருட்கள் அகற்றும் பணி இடைநிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களையும், சுகாதார சீர் கேடுகளையும் எதிர் கொள்ள நேரிட்டுள்ளது.
கொழும்பு நகர் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இவ்வாறானதொரு இடத்தில் மக்கள் சுமுகமாக வாழுவதற்கு குடிநீர், மின்சாரம் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றல் ஆகிய மூன்று விடயங்களும் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் மக்களின் இயல்பு வாழ்வும், சுகாதாரமும் கேள்விக் குறியாகி விடும். முக்கியமாக இப்பிரச்சினைகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கற்பினிப் பெண்களே பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
வீட்டுக் கழிவுப் பொருட்களை வீடுகளில் ஒரு நாள் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் அதன் பிறகு துர்நாற்றம் வீசத் தொடங்கும் இது பாரியதொரு பிரச்சினை மட்டுமல்லாது தொற்று நோய்கள் விரைவாக பரவுவதற்கும் வழிசமைத்து விடுகின்றது.
இந்த வகையில் கடந்த ஒருவார காலமாக கழிவுப் பொருட்களை கொட்டும் வத்தளைப் பிரதேசத்தில் கொண்டுபோய்க் கொட்டும் செயற்பாடு இடை நிறுத்தப்பட்டுள்ளதால் கொழும்பு நகரின் பல வீதிகளும், பொது இடங்களும் கழிவுப் பொருட்களால் நிரம்பி பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுப் பொருட்களை நாய்கள், எலிகள், பூணைகள் மற்றும் காகங்கள் கிளறிச் சாப்பிடுவதால் மக்கள் நடமாடும் இடங்களில் அவை சிதறுண்டு ஆங்காங்கே காணப்படுவதால் மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர்மாடி வீடுகளில் அதிகமான குப்பைகள் நிறைந்து மக்கள் என்ன செய்வது என்று தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். கழிவுப் பொருட்கள் அகற்றும் பணியாளர்களிடம் கேட்டால் அவர்கள் லொறிகள் வராத காரணத்தினால் அவற்றை ஏற்றி அனுப்ப முடியாதுள்ளதாகவும் நேற்று நண்பகல் வரை லொறிகள் வரவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைநகர் மக்களின் சுகாதார நலன்களை கருத்திற் கொண்டு அரசாங்கமும், சம்பந்தபட்ட அமைச்சு, நகர மற்றும் மாநகர சபைகள், மாகாண சபைகள் உடநடிக் கவனம் செலுத்தி நிறைந்து வழியும் கழிவுப் பொருட்களை உடன் அகற்றித் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நடவடிக்கை தொடருமானால் பாரிய தொற்று நேய்கள் பரவுவதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.