கடந்த 15வருடத்துக்கு மேலாக போஸ்டர்கள்( posters, banners, cutouts, polythene) பயன்படுத்தாமல் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான கருஜயசூரிய - சபாநாயகராக நியமிக்கப்பட்ட பின்னர், ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவுக்குள் ஒருநாள்கூட காலடி எடுத்துவைத்ததில்லை.கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம், உயர்மட்டக் கூட்டம் என கட்சிசார்ந்த எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்கியதில்லை - ஈடுபட்டதில்லை.
தனது மருமகனான நவீன் திஸாநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்கும் நிகழ்வைக்கூட ' அதிஉயர் சபையில் நடுநிலை' கருதி புறக்கணித்திருந்தார். ( அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.)
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சியாக இருந்தபோதிலும், கூட்டு எதிரணிக்கு ( மஹிந்த தரப்புக்கு) சபைக்குள் சகல உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கியிருந்தார்.
( நிலையியற்கட்டளையின் 27-2 இன் கீழ் விசேட கேள்வி எழுப்புதல், விவாதங்களின்போது நேர ஒதுக்கீடு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி என மேலும் பல விடயங்களை குறிப்பிடலாம்)
நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும், சபை ஒழுக்க விழுமியங்களையும் மீறும் வகையில் செயற்பட்ட மஹிந்த அணி உறுப்பினர்களுக்கு எதிராக 'அதிகபட்ச' நடவடிக்கையை அவர் எடுத்ததில்லை. எச்சரிக்கையை மாத்திரமே விடுத்திருந்தார்.
(அட்டகாசம் தொடர்ந்ததாலேயே விமல், பிரசன்ன ரணவீர போன்றவர்களுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது)
ஆளுங்கட்சி எம்.பிக்கள் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினால்கூட அது விடயதானத்துடன் தொடர்புபடாவிட்டால் மறுநொடியே ஒலிவாங்கியை முடக்கிவிடுவார் கரு.
எதிரணி எம்.பிக்களால் எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் கட்டாயம் சபைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றம், தகவல் அறியும் உரிமை அமுல்படுத்தல், இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை, எம்.பிக்களுக்கான ஒழுக்ககோவை என மேலும் பல விடயங்களில் கருவின் வகிபாகம் அளப்பெரியது.
பிரதமர் பதவியை ஏற்குமாறு 'குறுகிய அரசியல்' நோக்கோடு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அறிவிப்பை 'பதவிநிலையைக் ' கருதி நிராகரித்தார்.
இப்படி பல விடயங்களை பட்டியலிட்டுக்காட்டலாம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும், ஜனநாயகத்தின் காவல் நாய் என்றும் போற்றப்படும் ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது- அதை பாதுகாக்க முன்வரவேண்டும். 'நடுநிலை' 'அரசியல்' போன்ற காரணங்களைக்கூறி ஒதுங்கி நிற்ககூடாது.
சபாநாயகரே ஜனநாயகத்துக்காக சமராடுங்கள்....என்றும் நாங்கள் உங்களுடன்.....
