சாய்ந்த கட்டிடம் பேசுகிறாள்
++++++++++++++
Mohamed Nizous
யார் யாரோ சேர்ந்து
என்னையும் உன்னையும்
'கட்டி' வைக்கிறார்கள்.
கட்டிய பின்
கடமை முடிந்து
கழன்று விடுவார்கள்.
அதன் பின்
ஆரம்பிப்பது
நம் வாழ்க்கை
நீ
நிமிர்ந்து நிற்க
நான்
சாய்ந்து நிற்க
இப்படி
இருந்தால்தான்
இருவருக்கும் அழகு.
நான் உன்னில்
தங்கவில்லை என்றாலும்
நீ
என்னைத் தாங்கவில்லை
என்றாலும்
ஏற்படும் நஷ்டம்
இருவருக்குமே
உன்
ஆரம்பமும்
என்
ஆரம்பமும்
இரு வேறு
இடங்களில்.
ஆனால்
இடையில் சேர்ந்து
இறுதி வரை செல்வோம்.
நான்
விழாமல்
நீ
பிடித்திருப்பது போல
நீ
விழாமல்
நானும்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
மறந்து விடாதே.
இருவக்கும்
'பிடித்து'ப் போவதுதான்
இனிய வாழ்க்கை.
இனி எம் வாழ்க்கை.
கட்டி வைப்பவர்கள்
கவனமாய் இருக்கும் வரை
ஒட்டி வாழும் வாழ்க்கை
உடைந்து போகாது.
இதை
இருவரும் சேர்ந்து
இந்த உலகுக்கு
எடுத்துச் சொல்வோம்
இதயங்களை வெல்வோம்