மலையக அரசியலில் பெண்களுக்கு தலைமைத்துவம் கொடுத்து அவர்களின் உரிமைகளுக்கு சம அந்தஸ்து கொடுக்கும் ஒரே ஒரு அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையாகாது. அந்த பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸையே சாரும் என மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்று கூடல் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று முன் தினம் நடைப்பெற்றது.இதன்போது புதிய பொதுச்செயலாளராக அனுஷ்யா சிவராஜாவும்,பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் உப தலைவராக சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நாட்டின் அரசியல் தலைவர்களான அனைவரிடமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பிலும் மிக உயர்ந்த நன்மதிப்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இதற்கு காரணம் காங்கிரஸின் முடிவுகள் அனைத்தும் கொள்கை ரீதியானதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருந்துவந்ததேயாகும். ஆதனால் எவரிடமும் தலைநிமிர்ந்து தைரியமாக பேசக்கூடிய வல்லமை காங்கிரஸிற்கு மட்டுமே இருக்கிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் 105 வது ஜனன தினத்தன்று இவ்வாறானதொரு நிர்வாக மாற்றம் மகிழ்ச்சியளிக்கின்றது.காலனித்துவ காலத்தொட்டும் அதற்குப் பின்னும் அடக்கு முறையையும் சமூக அநீதியையும் அஹிம்சை வழியில் எதிர்த்துப் போராடி அரசியல்,பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்திய சமுதாயத்தினருக்கும் பெற்றுக்கொடுத்த மாமனிதரே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இன்று அவரின் வழியில் நின்று செயற்படும் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமது சமூகம் எதிர் நோக்குகின்ற சவால்களை வெற்றிகொள்வதே இலக்காக கொண்டு செயல்படுகின்றார் என்றார்.