கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டப் பகுதியில் நிலவும் குறைபாடுகள்
மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அதன் முகாமைத்துவ குழுவினர்,
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸை இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்த சுமார் 460 குடும்பத்தினர் குடியிருக்கும் 38 தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் நிலவி வருகின்ற முக்கிய சில குறைபாடுகள் குறித்து இம்முகாமைத்துவக் குழுவினர் இதன்போது பிரதி
அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.
இவற்றை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார்.
அத்துடன் இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முகாமைத்துவ குழுவின் தலைவர் ஆஸாத் ஹாஜியார் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம்.நிசார், எம்.எஸ்.எம்.சத்தார், பிரதி அமைச்சரின் இணைப்பு
செயலாளர்களான கே.எம்.தௌபீக், நௌபர் ஏ.பாவா, முன்னாள் மாநகர சபை
உறுப்பினர் பி.ரி.ஜமால்தீன், மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை
உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.