முர்சித்-
வாழைச்சேனை கடதாசி ஆலையை மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் பயன்டுத்துவதற்கு கிழக்கு மாகாண சபையினூடாக உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் மேற்கொண்டு ஆலை நிருவாகம் மற்றும் பிரதேச திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடதாசி ஆலையின் அபிவிருத்திக்காகவும், இக்கடதாசி ஆலையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்காக ஆளுநராகிய நானும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். மேலும் கடதாசி ஆலையின் அபிவிருத்தி ஊடாக வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி.ஜே.முரளிதரன், கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.இளம்குமுதன், ஓட்டமாவடி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க தயாரத்ன மற்றும் கடதாசி ஆலை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.