கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா நிகழ்வும் சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் இன்று (26) திங்கட்கிழமை இடம்பெற்றது.
கவிக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா குழுவின் ஏற்பாட்டில் இருநாள் நிகழ்வாக இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து விஷேட பேராளர்களாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸன் அலி, முத்தலிபா பாரூக், எம்.அஸ்லம், கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர், அவரின் பாரியார், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், டாக்டர் தாஸிம் அகமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வின் தொடக்கவுரையினை நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் பவள விழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமானை பாராட்டி கவிதையினை பாடி சபையோரை விரம்மிக்க வைத்தார்.
2014ம் ஆண்டுக்கான கவிக்கோ விருதினை கவிஞர் பொன். செல்வ கணபதி அவர்களுக்கு மலேசிய நாட்டு இளைஞர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.சரவணன் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுவிக் வட்டார வர்த்தக மன்ற தலைவர் டாக்டர் முகம்மது இக்பால், திரைப்பட இயக்குநர்களான கே.பாக்கியராஜ், அமீர், சீமான் உள்ளிட்ட திரைப்பட இசையமைப்பாளர், பல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாளை இடம்பெறவுள்ள இறுதிநாள் நிகழ்வுக்கு கவிக்கோ கவிதை அறக்கட்டளைக்குப் பொற்கிழி வழங்கி நிறைவுரை நிகழ்த்துவதற்காக முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கலந்து கொள்ளவுள்ளார்.




