பரணகம அறிக்கையானது, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலும் பார்க்க பாரதூரமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மஹிந்த ராஜபக்ஸ மூன்று வெளிநாட்டவர்களை நியமித்தார்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் அறிக்கையை விட பாரதூரமானது. என்ன முட்டாள் தனத்திற்காக இதனை கோரினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
பரணகம அறிக்கையை முன்னதாகவே நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தால் ஐக்கிய நாடுகள் அறிக்கை இதனைவிட பாரதூரமாக அமைந்திருக்கும்.
வெள்ளைகொடி வழக்கு, சார்ள்ஸ் கொலை, புலிதேவன் மற்றும் இசைபிரியா உள்ளிட்டவர்களின் கொலை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் அவ்வாறு எந்தவொரு சம்பவம் குறித்து பெயரிடப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
