“அதான் ஒரு அழைப்பு மட்டுமல்ல; இதயங்களைத் திறக்கும் இஸ்லாத்தின் திறவுகோல்” – அஷ்-ஷெய்க் மபாஸ் முப்தி (யூசுபி)



எம்.வை. அமீர்-
சாய்ந்தமருது–மாளிகைக்காடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கிளை மற்றும் சாய்ந்தமருது–மாளிகைக்காடு கதீப் மற்றும் முஅத்தீன் நலன்புரிச் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இஜாஸாவுடன் இணைந்த அதான் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (12.06.2026) சாய்ந்தமருது–மாளிகைக்காடு ACJU கிளை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஏ. கலீலுர் ரஹ்மான் (ஸலபி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாணந்துறையில் அமைந்துள்ள இப்னு உமர் ஹதீஸ் உயர்கல்வி நிறுவனத்தின் அதிபரும் பிரபல மார்க்க அறிஞருமான அஷ்-ஷெய்க் மபாஸ் முப்தி (யூசுபி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வை சாய்ந்தமருது–மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா கிளையின் செயலாளர் எம்.எச்.எம். நப்றாஸ் (ரஹ்மானி) நெறிப்படுத்தினார். மேலும், பயிற்சி நெறியை முன்னெடுத்த அப்துர் ரஹ்மான் இஸ்லாமிய அகாடமியின் அதிபரும் நூருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான அபூ அப்திர் ரஹ்மான் M.B.M. முர்ஷித் (அர்ரஸாதி) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

அஷ்-ஷெய்க் மபாஸ் முப்தி (யூசுபி) அவர்கள் தனது உரையில், “முஅத்தீனின் குரல் முஸ்லிம்களின் காதுகளை மட்டுமன்றி பிற மதத்தவர்களின் உள்ளங்களையும் சென்றடைகிறது. எனவே அதான் வெறும் ஒலிப்பதற்கான வார்த்தைகளின் தொகுப்பாக இல்லாமல், இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் இதயபூர்வமான அழைப்பாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

முஅத்தீன்களின் சமூகப் பங்கு குறித்து விரிவாகப் பேசிய அவர், “முஅத்தீன்கள் பள்ளிவாசல்களின் சேவகர்கள் மட்டுமல்ல; சமூகத்தை வழிநடத்தும் முக்கிய ஆளுமைகள். அவர்களின் குரல் அழகாக இருப்பதுடன், அவர்களின் பண்பாடு, இறையச்சம், இக்லாஸ் மற்றும் ஒழுக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதான் கேட்கும் ஒரு முஸ்லிம் தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கி விரைய வேண்டும்; அதேபோல் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாத்தின் உயரிய பண்புகளால் ஈர்க்கப்பட வேண்டும்” என்றார்.

அவர் தனது உரையில் ஒரு அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அழகிய குரலில் அதான் கூறிய ஒரு முஅத்தீனின் குரலால் ஈர்க்கப்பட்ட பௌத்த மதத்தவர் ஒருவர், அந்த அதானை தினமும் ரசித்து கேட்டதாகவும், தனது சமயத்தினரிடமும் அதனை எடுத்துக்காட்டாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இது அதானின் தாக்கமும் முஅத்தீன்களின் பொறுப்பும் எவ்வளவு உயர்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மார்க்கப் பணிகள், தாஹ்வா, கல்வி மற்றும் சமூக சேவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதற்கான வழிமுறைகளே அன்றி இறுதி இலக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் பெறுவதே உண்மையான இலக்கு. பதவி, புகழ், பாராட்டு அல்லது பிரபல்யம் ஆகியவற்றிற்காக அல்லாமல் தூய்மையான இக்லாஸுடன் செயல்பட வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.

இக்லாஸின் அவசியம் குறித்து உரையாற்றிய அவர், “நல்ல நோக்கம் இருப்பது மட்டும் போதாது. அதன் பின்னணியில் அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே இருக்க வேண்டும். புகழுக்காகச் செய்யப்படும் நல்ல செயல்கள் கூட உண்மையான பலனைத் தராது” என எச்சரித்தார்.

உரையின் இறுதிப் பகுதியில் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “ஒரு கயிறு பல சிறிய நார்களின் இணைப்பால் உருவாகிறது. தனித்தனியாக பலவீனமாக இருக்கும் அந்த நார்கள் ஒன்றிணையும்போது யானையையும் கட்டுப்படுத்தும் வலிமையைப் பெறுகின்றன. அதுபோல உலமாக்கள், சமூகத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால், ஒரு சமூகத்தை முன்மாதிரியாக மாற்ற முடியும்” எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அதான் பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கு இஜாஸாவுடன் கூடிய சான்றிதழ்கள் பிரதம அதிதி மற்றும் முக்கிய பிரமுகர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூகப் பிரமுகர்கள், கதீப்கள், முஅத்தீன்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மார்க்கக் கல்வி மற்றும் பள்ளிவாசல் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான பயிற்சி நெறிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.









 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :