சாய்ந்தமருதுக்கென தனியான நகர சபையை நிறுவி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதனுடன், நகர சபைக்கான எல்லை நிர்ணயப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவசரமாக முன்னெடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாய்ந்தமருது நகர சபை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் கலந்துகொண்டார்.
மேலும், முன்னாள் பிரதேச செயலாளரும் ஓய்வுநிலை சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் செயலாளர் அப்துல் அஸீஸ், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட், டொக்டர் ஷிஹாப் ஆகில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் பர்ஹான் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
சாய்ந்தமருதுக்கென தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்ட வலுவுடையது என உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 07 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருந்தது. அதேவேளை, இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணயப் பணிகளை நிறைவு செய்து, நகர சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சாய்ந்தமருது நகர சபையை நடைமுறைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சருடனான இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடலின் போது, நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள், நகர சபை உருவாக்கத்திற்கான நிர்வாக நடவடிக்கைகள், எல்லை நிர்ணயப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள விடயங்களை உடனடியாக முன்னெடுத்து, மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அங்கிருந்தவாறே அமைச்சர் பல்வேறு பணிப்புரைகளை வழங்கினார். குறிப்பாக, சாய்ந்தமருது நகர சபைக்கான தற்காலிக அலுவலகத்தை அவசர அடிப்படையில் நிறுவுதல், அதன் மூலம் ஆரம்பகட்ட நிர்வாகச் சேவைகளை முன்னெடுத்தல், தேவையான பௌதீக வளங்கள், இயந்திர வசதிகள் மற்றும் ஆளணியினரை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதேபோன்று, கிழக்கு மாகாண ஆளுநருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும் வகையில் கடிதம் ஒன்றை உடனடியாக அனுப்புவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பான அனைத்து முன்னேற்றங்களையும் நேரடியாக கண்காணிப்பதற்காக விரைவில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன இதன்போது தெரிவித்தார்.
நீண்டகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்பட்டு வந்த தனி நகர சபை கோரிக்கை, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் தற்போது நடைமுறை வடிவம் பெறும் கட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி எதிர்பார்ப்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment