ஊடகப்பிரிவு-
புதிய அரசின் நல்லாட்சியின் காலத்தில் மலர்ந்திருக்கும் முதலாவது தமிழ், சிங்கள புத்தாண்டினை சங்கையுடன் சந்தோஷமாக இலங்கை தேசத்தில் ஒற்றுமையாக கொண்டாடும் அனைவருக்கும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியினைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது வாழ்த்தறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
இலங்கை தேசத்தில் வாழ்கின்ற நாம் அனைவரும் மனித மேம்பாடு, மானிட வசந்தம், இன ஐக்கியம், அனைவர் ஒற்றுமை போன்ற முறைமையைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவே எமது நாட்டில் நிரந்தர அபிவிருத்தி மற்றும் வாழ்வு மேம்பாட்டினைக் காண முடியும். என கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த கொடூரமான யுத்தம் காரணமாக மூவின மக்களும் பிரிந்து தூரமானவர்களாக இருந்தனர். ஒருவரை ஒருவர் சந்திப்பதும், பழைய உறவுகள், நண்பர்கள் கண்டு கொள்வதும் கஷ்டமான ஒன்றாக இருந்தது.
ஆனால் இன்று நம் நாட்டில் நல்லாட்சி ஒன்று ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து ஒற்றுமையான வாழ்வுக்காக பெரிதும் ஆர்வம் கொண்டு, எமது மக்களின் வாழ்வில் அன்று இடம்பெற்ற சிக்கலானதுவும், முரண்பாடு மிக்கதுமான சந்தர்ப்பங்களை மறந்து, இன்று இனமதம், சாதி பேதம் பாராது ஒற்றுமையான இலங்கையர் என்ற நல்லெண்ணத்துடன் செயற்படும் விதம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இப்புனித புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களும் மற்றவர்களின் வாழ்வின் உயர்ச்சியில் பங்கெடுத்து, ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கோட்பாட்டில் எமது இலங்கை திரு நாட்டை சிறப்பாகக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்.
மலரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு இந்நாட்டுக்கும் மக்களுக்கும், இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைவருக்கும் சிறப்பாய் அமைந்து, செழுமை மிக்க ஒரு வாழ்வு அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
