கடந்த 28ந் திகதி பதுளையில் நடைபெற்ற பி பி எஸ் ஊர்வலத்தின் போது, பதுளை ரொக்ஹில் எனும் இடத்தை சேர்ந்த முஹமது அஸாம் எனும் முஸ்லிம் சிறுவன் தாக்கப் பட்டது குறித்து பல வதந்திகள் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் பரப்பப் பட்டு வந்த நிலையில் குறித்த மாணவனை நேரில் கண்டு தகவலறிந்ததில் குறித்த சம்பவம் பற்றியும் குறித்த
மாணவனின் குடும்ப பின்னணி பற்றியும் அறியக் கிடைத்தது.
கேள்வி :- உங்கள் பெயர் என்ன ?
பதில் :- எனது பெயர் முஹமது அஸாம்.
கேள்வி :- என்ன செய்கின்றீர்கள்.
பதில் :- நான் ப/ அல் அதான் ம வியில் தரம் பத்தில் கல்வி கற்கின்றேன். கடந்த ஒரு வார காலமாக ஒரு தேயிலை கடையில் பகுதிநேரமாக வேலைக்கு சேர்ந்துள்ளேன்.
கேள்வி :- குறிப்பிட்ட அன்றைய தினம் என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.
பதில் :- அன்று நான் கடையில் வேலை செய்துகொண்டிருந்து அசர் தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன் தொழுவதற்காக பள்ளிக்கு சென்றேன். நான் கடையிலிருந்து பெற்றல் செஷட்டை தாண்டி போகும் போது, ஒரு கூட்டம் நீண்ட பேனர் ஒன்றை பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள், நான் அவர்களை தாண்டி தான் பள்ளிக்கு போக வேண்டி இருந்தது. அப்போது அங்கிருந்து நான் இருந்த பக்கம் ஒருவர் வந்து எனது தலையிலுள்ள தொப்பியை கழட்டு என்று சிங்களத்தில் சொல்லி எனது தலைக்கு ஒன்று அடித்தார். நான் அதை கழட்டி எனது காற்சட்டை பைக்குள் போட்டுகொண்ட்டு அவர்களை கடந்து செல்ல முயன்ற போது இன்னும் சிலர் வந்து எனது கையால் பிடித்துக் கொண்டு எனது வாப்பாவின் பெயரையும் உம்மாவின் பெயரையும் கேட்டார்கள். நான் பதில் சொன்ன போது பின்னால் எனது முதுகில் ஒருத்தர் குத்தினார். அப்போது இன்னும் ஒருவர் எனது கன்னத்தில் அடித்தார்
.
கேள்வி :- உங்களை அடிக்கும்போது யாரும் உங்களை காப்பாற்ற வில்லையா ?
பதில்:- அப்போது எனது மாமாவின் கூட்டாளியான “சந்தா ” என்பவர் என்னை அடிக்க விடாமல் காப்பாத்தி பக்கத்துக்கு அழைத்து சென்றார். அவர் என்னை அழைத்து செல்லும் போது பின்பக்கத்தில் இருந்த ஒருவர் எனது தலைக்கு அடித்தார். என்னை இந்த இடத்திற்கு அனுப்பியது ஒரு “தம்பியனா” என்று கேட்டு மீண்டும் அடிக்க வந்தார். அப்போது சந்தா எனும் எனது மாமாவின் கூட்டாளி என்னை அடிக்க விடாமல் என்னை கட்டிபிடித்து பாது காத்தார். அப்போது இன்னும் சிலர் என்னிடத்தில் கமரா உள்ளதா என்று எனது காற்சட்டை பையில் கைபோட்டு தேடி பார்த்தார்கள். அப்போது எனது உம்மாவின் “போன்” எனது பொக்கட்டில் இருந்து அதை எடுத்து பார்த்தார்கள். பிறகு இந்த போனில் காமரா இல்லை இதனால் வீடியோ பண்ண முடியாது என்று கூறி இன்னொருவரிடம் போனை கொடுத்தார்.
கேள்வி :- நீங்கள் வழமையாக போன் பாவிப்பீர்களா ?
பதில்:- இல்லை, உம்மாவின் போன் சிம் காணாமல் போனதால் புதிய சிம் கார்ட் ஒன்றை போட்டுவருமாறு உம்மா சொன்னதால் அன்று உம்மாவின் போனை எடுத்துக் கொண்டு சென்றேன்.
கேள்வி:- பிறகு என்ன நடந்தது ?.
பதில் :- போனை இன்னொருவரிடம் கொடுக்கும் போது அங்கிருந்த போலிஸ் அங்கள் ஒருவர் வந்து அந்த போனை எடுத்து பார்த்து அதில் வீடியோ பண்ண முடியாது என்று கூறி போனை என்னிடம் தந்து என்னையும் கூட்டிக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போனார்கள் . பிறகு எனக்கு குடிக்க ஏதும் வாங்கித்தரவா என்று கேட்டார்கள். நான் வேண்டாம் என்று கூறி என்னை இறக்கி விடுமாறு கூறினேன். என்னை போலிஸ் ஜீப்பிலிருந்து இரக்கும் போது சந்தா என்பவர் மீண்டும் வந்து எனது மாமாவின் கடையில் என்னை சேர்த்துவிட்டு சென்றார்.
பாதிக்கப் பட்ட மாணவன் “முஹம்மத் அஸாமின்” தாய் சித்தி பாயிஸா அவர்களிடம் இச்சம்பவம் பற்றி கேட்ட போது ,
“ நாங்கள் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஏழைகள் தொர, இந்த வீடு ( இரு அறைகள் ) கூட சில வருடங்களுக்கு முன் பதுளை வை எம் எம் ஏ நிறுவனத்தால் கட்டித்தரப் பட்டது. எனது கணவர் கிட்னி ஆபரேஷன் பண்ணப் பட்டு கடுமையான வேலைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளார். அவர் “அலுமினியம் பிட்டிங்க்ஸ்” வேலை தான் செய்தாரு. இப்போது அவரால் பெரிதாக உழைக்க முடியததால் மகனை நான் ஒரு தேயிலை கடையில் பகுதிநேரமாக வேலைக்கு சேர்த்துள்ளேன். பாடசாலை முடிந்ததும் அவர் அங்கு வேலைக்கு செல்வார். அவன் மிகவும் அமைதியான தொழுகை இபாதத்களில் ஈடுபாடுள்ளவன். வேலைக்கு சேர்ந்தும் இப்போது நான்கு ஐந்து நாட்கள் தான் ஆகின்றன. அதற்கிடையில் தான் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது.
எனது மகன் எப்போதும் மார்கத்த்ல் ஈடுபாடு உள்ளவன் . அவன் எப்போதும் தலையில் தொப்பியுடன் தான் இருப்பான். இரவு படுக்கைக்கு செல்லும் போதும் தொப்பியை பக்கத்தில் கழட்டி வைத்துவிட்டுத்தான் படுப்பான். விடிய எழும்பும் போது அதை அணிந்துகொண்டுதான் வெளியில் வருவான். அன்றைய தினமும் தலையில் தொப்பியுடன் தான் அந்த இடத்தால் சென்றுள்ளான். அதனால் தான் அவன் அடிவாங்க நேர்ந்தது. அதேநேரம் அந்த கூட்டத்தில் இருந்த எனது மருமகனின் சிங்கள நண்பன் ஒருவனாலேயே எனது மகன் பாதுகாக்கப் பட்டு அழைத்து வாரப் பட்டுள்ளான் .
இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு நான் மகனை பார்க்க வந்த போது அவனது கன்னம் வீங்கி முகம் சிவந்து காணப் பட்டது. என் உள்ளம் பதைபதைத்து அழுது விட்டேன். பிறகு அவனை கூட்டிக்கொண்டு கொண்டு வரும் போது இன்னுமொரு சிங்களப் பெரியவர் எனது மகனை கண்டு அருகில் வந்து, எனது மகனின் தலையை தடவி அழுது விட்டார். அப்போது அவர் சொன்னார், “ மிருகங்களைப் போல் இந்த சிறுவனை அடித்தார்கள். அந்த வேளையில் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது போய்விட்டது. இந்த நாட்டிற்கு என்ன நடந்து விட்டதோ தெரியாது மகள்”. என்று கூறி கவலையுடன் சென்றார்.
நான் மகனை கூடிக்கொண்டு வரும் போது எனது மகனை அடித்த ஒருவனை எனக்கு அடையாளம் காட்டினான். ( இவன் அதுல என்று அழைக்கப்படும் விஹார கொட, மைலகஸ் தென்ன ஆட்டோ பார்க்கில் UP AAJ- 8848 இலக்க ஆட்டோ ஓட்டுனர் என்று இன்னொருவரால் அடையாளம் காணப் பட்டுள்ளது.)
நாங்கள் ஏழைகள், ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இன்றி எங்கள் பாட்டில் வாழும் முஸ்லிம்கள். எங்களது சமய கலாசார படி வாழ எங்களுக்கு முடியாதா? அரசாங்கம் இந்த விடயங்களை கவனித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
அஸாமின் தந்தை அப்துல் காதர் அவர்களிடம் இச்சம்பவம் பற்றி கேட்ட போது , “ நான் இதைப்பற்றி கேள்வி பட்ட போது வெலிமடையில் இருந்தேன். எனது மகனை போட்டு அடிக்கின்றார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தவுடன் என்னால் பறந்து வர முடியாதே என்று பதட்டத்துடன் அவசரமாக வந்தேன், நான் ஒரு கணவனை இழந்த (காலம் சென்ற) விதவையை தான் திருமணம் முடித்தேன். அவள் தான் அசாமின் தாய். அவளுக்கு ஏற்கனவே இருந்த இரண்டு பெண்பிள்ளைகளை திருமணம் முடித்து கொடுத்து விட்டேன். அல் ஹம்துலில்லாஹ் அவர்கள் இன்று ஓரளவு நன்றாக வாழ்கிறார்கள். இன்னும் ஐந்து பிள்ளைகள் எனது பொறுப்பில் உள்ளார்கள். எங்களுக்கு வறுமை கஷ்டதுன்பங்கள் இருந்தாலும் இன மத வேறுபாடின்றி இந்த சமூகத்தில் உழைத்து வாழ்கின்றோம்.
இந்த சம்பவத்தில் எனது மகனை காப்பாற்றி அழைத்து வந்தவரும் ஒரு சிங்கள சகோதரன் தான். அதே வேலை இந்த கூட்டத்தை நடத்திய தயாசிறி , “ பொது பல சேனா என்பது ஒரு இனவாத அமைப்போ பயங்கர வாத அமைப்போ இல்லை என்று கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரது பின் புறத்தில் எனது மகன் தாக்கப் படுகின்றான். இவன் ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் அடிக்கும் போது எனது மனம் பட்ட வேதனையை அந்த அல்லாஹ் ஒருவன் தான் அறிவான். நான் இவர்களிடம் கேட்பது தயவு செய்து இனவாதத்தை கைவிட்டு இவ்வளவு காலம் நாம் ஒற்றுமையாக வாழ்ந்தது போல் இனிமேலும் வாழ்வோம். அடிபட்ட எனது மகன் ஒரு சிறுவன். அவன் முஸ்லிமான ஒரே காரணத்தால் அடிவாங்கிது அவனுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. அவன் உயிரோடு வாழும் காலமெல்லாம் அதை அவன் மறக்க மாட்டான். இது ஒரு மோசமான நிலையாகும்.” என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட செல் போனுடன் முஹம்மது அஸாம்
சிறுவனை அடித்த அதுல என்பவனின் ஆட்டோ

0 comments :
Post a Comment