புரவலர் ஹாஷிம் உமரினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு



சிறப்பாக நடைபெற்ற 22ஆவது கட்ட விநியோகம் – இதுவரை 115 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்

அஸ்லம் எஸ். மௌலானா-
ல்வியே சமூக முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய முதலீடு என்ற உயரிய நோக்கத்துடன் செயற்பட்டு வரும் ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கும் தனது சமூகப் பொறுப்புணர்வு வேலைத்திட்டத்தின் 22ஆவது கட்ட விநியோக நிகழ்வை இன்று (13.06.2026) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சிறப்பாக நடத்தியது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களாக புத்தளத்தைச் சேர்ந்த எம்.ஐ. இகாசா பானு, குருநாகலைச் சேர்ந்த ஜே.ஜி.எஸ். துலாஞ்சலி, பொல்கஹவெலவைச் சேர்ந்த ஏ.ஆர்.எப். றம்லா, யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த ஆர். கிருதிகா மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம். மின்னா ஆகியோர் காணப்பட்டனர்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இதுவரை 22 கட்டங்களாக மொத்தம் 115 பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கல்விப் பயணத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஏ.எம். ரழீம், பிரபல பாடகர் அமீர்கான், வசந்தம் எப்.எம். தயாரிப்பாளர் அஸ்கர், விடியல் நியூஸ் ஊடகவியலாளர் ரிப்தி அலி, சக்தி எப்.எம். ஊடகவியலாளர் சௌகி ஜப்பார் உள்ளிட்ட பல ஊடகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, ஹாஷிம் உமர் பௌண்டேசனின் பணிப்பாளர் மரியம், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட் மற்றும் அர்கம் சுலைமான், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது அண்மையில் திருட்டுச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசன் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் அவசர தேவைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் பௌண்டேசனின் மனிதநேய செயற்பாடுகளின் மற்றுமொரு வெளிப்பாடாக இது அமைந்தது.

மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அதிதிகள் நினைவுப் பரிசில்களால் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பங்களித்து வரும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் சமூக சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டன.

கல்வி, சுகாதாரம், சமூக நலன், அனர்த்த நிவாரணம், ஆதரவற்றோர் பராமரிப்பு மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஹாஷிம் உமர் பௌண்டேசன் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள், கல்வி உபகரணங்கள், புலமைப்பரிசில்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

"ஒரு மாணவனுக்கு வழங்கப்படும் கல்வி உதவி என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடு" என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் இந்த மனிதநேயப் பணிகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் உயர்வாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.













 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :