பாதுகாப்பான, ஒழுங்குமுறையான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்கில், புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) இன் கீழ் இயங்கும் புலம்பெயர் தகவல் நிலையம் (Migrant Information Centre – MIC) இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “MIC இலங்கைக்கும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான ஊடக இணைப்பு செயலமர்வு” 2026. 06.13 ஆம் திகதி சனிக்கிழமை மருதமுனையில் அமைந்துள்ள மூன் விலேஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர் தகவல் நிலையம் (MIC) திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக ஈடுபாட்டு செயலமர்வாகும்.
செயலமர்வில் சுவிட்சர்லாந்தின், மாலைதீவிற்கும் இலங்கைக்குமான தூதுவர் கலாநிதி சிறி வால்ட் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார். அதேவேளை MIC இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதான நோக்கம், MIC இலங்கை, அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வு தொடர்பான சரியான தகவல்களையும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே பரவலாக கொண்டு செல்வதாகும்.
நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் கலாநிதி சிறி வால்ட், உலகளாவிய ரீதியில் புலம்பெயர்வு இன்று முக்கியமான சமூக மற்றும் பொருளாதார விடயமாக மாறியுள்ளதைக் குறிப்பிட்டார். பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வு முறைகள் தனிநபர்களின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலமாக மட்டுமே தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், சட்டவிரோத முகவர்கள் மற்றும் மோசடி வலையமைப்புகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
செயலமர்வின் முதல் அமர்வில் MIC இலங்கைக்கான இணைப்பாளர் ஷமிர் ஷாலிஹ் மற்றும் ஆலோசகர்களான சுமித்ரா சதாசிவம், சரத் பள்ளேகம ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு அமர்வுகளை வழிநடத்தினர். இவ்வமர்வில் புலம்பெயர் தகவல் நிலையத்தின் சேவைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது புலம்பெயர்வு தொடர்பான தகவல் வழங்கல், தனிநபர் ஆலோசனைச் சேவைகள், பரிந்துரை மற்றும் வழிகாட்டல் சேவைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்லும் முன் வழங்கப்படும் தகவல் அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை எட்டியுள்ள முக்கிய சாதனைகள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாவது அமர்வில் இலங்கையின் தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் தொடர்பான விரிவான விளக்கவுரை இடம்பெற்றது. 2025–2026 ஆம் ஆண்டுக்கான MIC புலம்பெயர்வு போக்கு மற்றும் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொழிலாளர் புலம்பெயர்வு நிலவரங்கள், அதிகளவில் தொழிலாளர்கள் செல்லும் நாடுகள், தொழில்துறை மாற்றங்கள், உருவாகிவரும் புதிய இலக்கு நாடுகள் மற்றும் எதிர்கால புலம்பெயர்வு போக்குகள் குறித்து பகுப்பாய்வுகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது அமர்வில் தற்போதைய புலம்பெயர்வு சவால்கள் மற்றும் உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மனிதக் கடத்தல், தொழிலாளர் சுரண்டல், கடன் அடிமைத்தனம், கடவுச்சீட்டு பறிமுதல், கட்டாய உழைப்பு போன்ற பிரச்சினைகளின் அறிகுறிகள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மனிதக் கடத்தல் (Human Trafficking) மற்றும் மனிதர்களைக் கடத்திச் செல்லல் (Human Smuggling) ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள், ஒழுங்கற்ற புலம்பெயர்வின் அபாயங்கள் மற்றும் அதன் சமூக, பொருளாதார விளைவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் புலம்பெயர்வு மோசடிகள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள், ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறப்படும் தவறான வாக்குறுதிகள், அதிகப்படியான ஆட்சேர்ப்பு கட்டணங்கள், Facebook மற்றும் WhatsApp வழியாக நடைபெறும் ஏமாற்று ஆட்சேர்ப்பு முயற்சிகள், அங்கீகாரமற்ற முகவர்களை அடையாளம் காணும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வு, பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் முக்கிய பங்களிப்பை வலியுறுத்தியதுடன், பொதுமக்களுக்கு நம்பகமான தகவல்களை வழங்குவதற்கான ஊடகங்களின் பொறுப்பையும் மீண்டும் நினைவூட்டிய ஒரு பயனுள்ள அறிவூட்டல் நிகழ்வாக அமைந்தது.
















0 comments :
Post a Comment