கலைஞனை காலம் மறக்கவில்லை: அமரர் ஸ்ரீசங்கருக்கு 46வது ஆண்டு நினைவஞ்சலி



ம் நாட்டின் புகழ்பெற்ற மேடை நாடக மற்றும் திரைப்படக் கலைஞரான அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் நினைவாக நடைபெறும் வருடாந்த நினைவஞ்சலி நிகழ்வு இம்முறையும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

கடந்த 46 ஆண்டுகளாக இடையறாது இந்த நினைவஞ்சலி நிகழ்வை அவரது பிரதான சிஷ்யரும் சமூகச் செயற்பாட்டாளருமான திரு. வீ. சண்முகராஜா அர்ப்பணிப்புடனும் அன்புடனும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இவ்வாண்டுக்கான நினைவஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு–14, லெயாட்ஸ் புரோட்வே சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பூதவராயர் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஸ்ரீசங்கர், தனது தொழில் காரணமாக கொழும்பில் குடியேறி தலைநகரின் மேடை நாடக உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். தனது திறமையான நடிப்பாலும் கலை மீதான அர்ப்பணிப்பாலும் தமிழ் நாடக ரசிகர்களின் இதயங்களில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

மேடை நாடகங்களில் பெற்ற வெற்றி அவரை திரைப்பட உலகிற்கும் அழைத்துச் சென்றது. இலங்கையில் தமிழ் திரைப்படத் துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பல திரைப்படங்களில் நடித்த அவர், “மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அவரது கலைத்திறன் இந்தியாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. அதன் பலனாக சிவாஜி கணேசனின் முதலாவது சினிமாஸ்கோப் திரைப்படமான “ராஜராஜ சோழன்” திரைப்படத்தில் ஈழத்துப் புலவராக நடித்ததன் மூலம் இலங்கைத் தமிழர் கலை உலகிற்கு பெருமை சேர்த்தார்.

அமரர் ஸ்ரீசங்கரின் நினைவுகளை நிலைநிறுத்தும் நோக்கில் “ஸ்ரீசங்கர் நற்பணி மன்றம்” நிறுவப்பட்டதுடன், அவருக்காக நினைவுச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவரது கலைப் பாரம்பரியத்தையும் மனிதநேயப் பணிகளையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், வருடந்தோறும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுடன் இணைத்து இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு நிகழ்வில் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் புரவலரான ஹாசிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் கலைச் சேவையையும் சமூகப் பங்களிப்பையும் நினைவுகூரும் இந்த அர்த்தமிக்க நிகழ்வில் கலையார்வலர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :