தேசிய சித்திரப் போட்டியில் மாவட்ட முதலிடம் பெற்ற கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன்
சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு கல்வி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் அதன் அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
“கூட்டுறவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமத்துவம்” என்ற தொனிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்போட்டி, கல்வி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், உறுப்பினர்கள் அல்லாத கல்விச் சேவையில் பணியாற்றுவோர், அவர்களது பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் அழகியல் மனப்பாங்குகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியின் கனிஷ்டப் பிரிவில் (தரம் 6–9) பங்கேற்ற கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் தரம் 9 மாணவரான ஜீவராசா கதுஷாத், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சித்திரக் கலையில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்து வரும் இவர், 2025 ஆம் ஆண்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” தேசிய சித்திரப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
அதேவேளை, சிக்னல் மற்றும் தெரண தொலைக்காட்சிகள் இணைந்து நடத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” உலக சிறுவர் தின சித்திரப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மேலும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பினால் நடத்தப்பட்ட “போதை ஒழிப்பு” சித்திரப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவன் ஜீவராசா கதுஷாத்தின் இந்தச் சிறப்பான வெற்றியை முன்னிட்டு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment