இஸ்லாமிய புத்தாண்டின் புனித ஆரம்பமான முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு சமூக ஒற்றுமை, மனிதநேய சேவைகள் மற்றும் மார்க்கப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில், மாலைதீவு Neurodiversity Association Male அமைப்பின் துனைத் தலைவி திருமதி Aminath Azeema அவர்கள் கல்முனை நூறானியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விசேட விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது பள்ளிவாசலின் தற்போதைய செயற்பாடுகள், அதன் சமூக மற்றும் ஆன்மீகப் பங்களிப்புகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, பள்ளிவாசலை மையமாகக் கொண்டு கல்வி மேம்பாடு, இளைஞர் வலுவூட்டல், சமூக நலத்திட்டங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான ஆதரவு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிவாசலின் தேவைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து நேரடியாக அறிந்துகொண்ட திருமதி Aminath Azeema அவர்கள், மனிதாபிமான உதவிகள், கல்வி மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமது அமைப்பின் ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுக்கிடையிலான மனிதநேய உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான கூட்டிணைவு முயற்சிகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டார்.
முஹர்ரம் மாதத்தின் ஆன்மீக அர்த்தம் நிறைந்த இந்நேரத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுடன் இணைந்து சேவையாற்றும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப் பயணமும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. மார்க்க நிலையங்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன், சமூக ஒற்றுமை மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிகள் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நூறானியா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இவ்விஜயம் எதிர்காலத்தில் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்புகளுக்கும் சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கியமான சந்திப்பாகக் கருதப்படுகின்றது.

0 comments :
Post a Comment