இது தொடர்பாக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தலைவர் மு. முஸ்னத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றபோது, காணிகளை இழந்த மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொன்னன்வெளிக் கண்டம் பகுதி 1982ஆம் ஆண்டு தீகவாபி புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 200 முஸ்லிம் விவசாயிகள் தமது பாரம்பரிய விவசாயக் காணிகளை இழந்தனர். இதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நீண்டகாலமாக பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன.
இவ்வாறு காணிகளை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதற்காக அன்றைய அமைச்சர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அந்த முயற்சிகளின் விளைவாக அரசாங்கத்தின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
எனினும், அக்காலத்தில் காணி வழங்கல் தொடர்பான விவகாரத்தை சில தரப்பினர் அரசியல் வெற்றியாகக் காட்டும் வகையில் கொழும்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப்படுத்தியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சிங்கள தேசியவாத அமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், மாற்றுக் காணி வழங்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் பின்னணியில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம் காணி வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்திற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பலமுறை ஆட்சிப் பொறுப்பிலும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவும் இருந்தபோதிலும், காணிகளை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணி வழங்குவதற்கான உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதற்கட்டமாக 38 ஏக்கர் காணியை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு முன்னேற்றமாகும் எனவும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீது மக்களிடையே நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, காணிகளை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான நீதியை உறுதிப்படுத்தும் வகையில் எஞ்சியுள்ள காணி வழங்கல் நடவடிக்கைகளையும் விரைவாக நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments :
Post a Comment