கிண்ணியா நகரசபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை



2021 ம் ஆண்டுக்கான கிண்ணியா நகர சபையின் வரவு செலவு அறிக்கையானது 2020.11.30ந் திகதிய விசேட அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய தவிசாளர் அவர்கள் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவு அறிக்கையை அங்கீகரித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்
தவிசாளரின் வேண்டுகோளைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிப்பதற்காக எழுந்த நகரசபை உறுப்பினர் மஹ்தி அவர்கள் இந்த வரவு செலவு அறிக்கையை எங்களால் அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால் அதிலே பின்வரும் குறைபாடுகளும் பிழைகளும் காணப்படுகின்றன. அவற்றை சரி செய்கின்ற போது அதற்கான பூரண ஒத்துழைப்பினை எங்களால் வழங்க முடியும் எனக் கூறி குறைபாடுகளை பட்டியல் படுத்திய படி மிக நீண்ட நேரம் உரையாற்றினார்.
1) வரவு செலவு அறிக்கை தயாரிக்கப்படுகின்ற போது கடந்த கால இரண்டு அல்லது மூன்று வருட வரவு செலவுகளை கருத்திற் கொண்டு அவற்றின் சராசரிளை அடிப்படைகளாகக் கொண்டுதான் வரவு செலவு அறிக்கையை தயாரித்திருக்க வேண்டும். அந்த முறைமை இங்கு பின்பற்றப்படவில்லை.
2) பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வரிகளைக் கொண்டு இயங்குகின்ற இச்சபையின் வரவு செலவு அறிக்கையானது பொதுமக்களிடமும் சமூக நிறுவனங்களிடமும் துறை சார்ந்த நிபுணர்களிடமும் ஆலோசனைகளையும் வேலைத்திட்ட முன்மொழிவுகளையும் பெற்று பட்டியற் படுத்தி அவற்றை முன்னுரிமை பட்டியல்களாக தயாரித்து அதன் பிரகாரம் வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வேலைத்திட்டங்களை தெரிவு செய்திருக்க வேண்டும். அந்த நியமம் இங்கு பின்பற்றப்படவில்லை.
3) கடந்தகால வரவு செலவு அறிக்கையின் தரவுகளைக் வைத்து அத்தரவுகளின் அடிப்படையில் 10 அல்லது 15 வீத அதிகரிப்பிலேயே இந்த வரவு செலவு அறிக்கையை தயாரித்து இருக்க வேண்டும். அந்த அடிப்படை இங்கே பின்பற்றப்படவில்லை.
4) நமது பிரதேசத்தில் போதைப் பொருள் பாவணைகள் அதிகரிக்கின்றன. அதனை தடுப்பதற்கான அல்லது அதிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கான எந்த ஒரு முன்மொழிவுகளும் இங்கு காணப்படவில்லை.
5) நமது கிண்ணியா வலயம் கல்வியிலே மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதனால் அதனை மேம்படுத்துவதற்கு, அபிவிருத்தி செய்வதற்கு எந்த ஒரு வேலைத்திட்டங்களும், முன்மொழிவுகளும் இங்கே காட்டப்படவில்லை.
6) அனர்த்தங்கள் வருகின்றபோது அவற்றை முகங் கொடுப்பதற்கான அல்லது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடிய எந்த ஒரு முன்மொழிகளும் இங்கு முன்மொழியப் படவில்லை.

7)தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய, அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இங்கு முன்மொழிய படவில்லை.
8) தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கடந்தகால தரவுகள் அதிகமாக இல்லாமல் செய்யப்பட்டிருப்பதோடு பிழையாகவும் குறிக்கப்பட்டுள்ளன. இது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

9) இந்த வரவு செலவு அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள தரவுகளில் அதிகமான கூட்டல், கழித்தல் போன்ற கணித்தற் பிழைகள் காணப்படுகின்றன.
10) மூலதனங்களுக்கான வரவுகள், செலவுகளில் எந்த ஒரு அடிப்படையும் இன்றி, உத்தரவாதங்களும் இன்றி அளவுக்கு அதிகமான தொகைகள் வரவாகவும் ,செலவாகவும் காட்டப்பட்டிருக்கின்றன.
11) இந்த வரவு செலவு அறிக்கையில் தன்னால் தற்போது சுட்டிக் காட்டப் படுகின்ற விடயங்கள் அனைத்தும் இங்கே திருத்தப்பட வேண்டும் என சுமார் 40 க்கும் மேற்பட்ட குறிப்புகளை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தினார். அவை அனைத்தையும் பிழைகள்தான் என தவிசாளரும் செயலாளரும் சபையில் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்தத் திருத்தங்கள் அனைத்தும் சரி செய்யப்படாமல் இவ் வரவு செலவு அறிக்கைக்கு அங்கீகாரம் கேட்பது வேடிக்கையானது. மேலும் இப் பிழைகளோடு அங்கீகரித்து அதனை மக்கள் பார்வைக்கு அல்லது வேறு மேலதிகாரிகளுக்கு அனுப்புகின்ற போது எமது சபை விமர்சனங்களுக்கு உள்ளாகலாம் என தெரிவித்துக் கொண்டதோடு இவை அனைத்தையும் திருத்தங்கள் செய்து மீண்டும் இச்சபைக்கு சமர்ப்பியுங்கள். நாங்கள் ஏகமனதாக அதற்கான அங்கீகாரத்தை தருகின்றோம் என கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
கௌரவ உறுப்பினர் மகதி அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து பிழைகளையும், குறைபாடுகளையும் கௌரவ தவிசாளர் கண்ணியமாக ஏற்றுக்கொண்டதோடு அந்த குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்ததற்கு உடன்பட்டு திருத்தங்களை செய்யுமாறு செயலாளரிடம் கோரிக்கையும் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கௌரவ உறுப்பினர் கலிபத்துல்லா அவர்கள் நகர சபையில் நடைபெறுகின்ற ஊழியர்களினதும் அதிகாரிகளினதும் செயற்பாடுகள் குறித்து மிகவும் காரசாரமாக உரையாற்றினார்.
அதன் பின்னர் கௌரவ உறுப்பினர் பஞ்சலிங்கம் அவர்களும் வரவு செலவு அறிக்கை சம்பந்தமாக சில குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து கௌரவ தவிசாளர் அவர்கள் இவ் வரவு செலவு அறிக்கையை அங்கீகரித்து தருமாறு கௌரவ உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
உடனடியாக எழுந்த கௌரவ உறுப்பினர் மஹ்தி அவர்கள் அதிகமான பிழைகளும் திருத்தங்களும் இருக்கின்றபோது இதனை வாக்களிப்பிற்கு விட முடியாது. சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்கள் அனைத்தையும் சரி செய்து புதிய வரவு செலவு அறிக்கையை மீண்டும் சமர்ப்பியுங்கள் அதற்கு பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம் என்று மீண்டும் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த தவிசாளர் அவர்கள் மீண்டும் ஒரு முறை சபை கூடுவது சிரமமானது. நிச்சயமாக உங்களால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து திருத்தங்களும் உங்கள் தரவுகளின் அடிப்படையில் சரி செய்யப்படும். அந்தத் திருத்தங்கள் யாவும் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையாக இதை கருத்தில் கொண்டு உங்கள் ஆதரவினை தாருங்கள் என்று கட்டாயப்படுத்தி வாக்களிப்பிற்கு சென்றார்.
மீண்டும் எழுந்த மகதி அவர்கள் உங்களால் எப்போது திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை பிரதிகளை எங்களுக்கு தரலாம் எனக் கேட்டார். தவிசாளர் அவர்கள் ஒரு வாரத்தினுள் உங்களுக்கு சமர்ப்பிப்பேன் என வாக்குறுதியும் வழங்கி வரவு செலவினை அங்கீகரித்து ஆதரவினை தாருங்கள் என்று கட்டாயப்படுத்தி வாக்களிப்பிற்கு சென்றார்.
வாக்களிப்பில் கௌரவ உறுப்பினர்கள் மஹ்தி, நிவாஸ், கலிபதுல்லா ஆகியோர் திருத்தங்கள் யாவும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாத்திரம் அதற்கு ஆதரவு தருவோம் என்ற நிபந்தனையை வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தனர். ஏனைய 7 உறுப்பினர்கள் நிபந்தனைகள் எவற்றையும் குறித்து சொல்லாமல் ஆதரவுகளை வழங்கினார்கள்.
அந்த வகையில் கிண்ணியா நகர சபையின் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :